News Just In

8/24/2026 11:18:00 AM

40°C-ஐ நெருங்கும் வெப்பநிலை; வடக்கு, கிழக்கு ஆபத்தில்! 7 மாவட்டங்களில் 81,865 பேர் பாதிப்பு

40°C-ஐ நெருங்கும் வெப்பநிலை; வடக்கு, கிழக்கு ஆபத்தில்! 7 மாவட்டங்களில் 81,865 பேர் பாதிப்பு


நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று(24) பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் ' எச்சரிக்கை' (Caution) மட்டத்தை எட்டக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இயற்கை அபாயங்கள் பற்றிய முன்னெச்சரிக்கை மையம் செம்மஞ்சள் நிற (Amber) வெப்ப வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.

நேற்று(23) மாலை 4:00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தல், இன்று மாலை 4:00 மணி வரை செல்லுபடியாகும்.

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு இந்த எச்சரிக்கை பொருந்தும்.

குறிப்பிடப்பட்ட சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பமானது பகல் நேரத்தில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே வெப்பமான வானிலையின் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்

போதுமான அளவு நீரைக் குடிக்க வேண்டும்; முடிந்தவரை நிழலான இடங்களில் அடிக்கடி ஓய்வு எடுக்க வேண்டும்.வெப்பத்தினால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய முதியவர்கள் மற்றும் நோயாளிகள் குறித்து அவதானமாக இருக்க வேண்டும்.வாகனங்களில் சிறுவர்களைத் தனியாக வாகனங்களுக்குள் விட்டுச் செல்லக் கூடாது.

வெளியில் கடினமான உடற்பயிற்சிகள் அல்லது வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைத்து, நிழலான இடங்களில் தங்குவதுடன் அதிகளவில் திரவ ஆகாரங்களை அருந்த வேண்டும்.இலகுரக, வெள்ளை அல்லது லேசான நிறமுடைய ஆடைகளை அணிய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையில் அண்மைக்காலமாக வெப்பநிலை வரலாற்று உச்சத்தை நெருங்கி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை ஆய்வாளர் மலித் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இதுவரை பதிவான அதிகபட்ச வெப்பநிலை 40.1°C ஆகும். இது 1983ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வவுனியாவில் பதிவாகியுள்ளது.

எனினும், அண்மையில் பொத்துவில் பகுதியில் 39.9°C வெப்பநிலை பதிவாகியுள்ளதுடன், இது வரலாற்று சாதனையை விட 0.2°C மாத்திரமே குறைவாகும். பொலன்னறுவை உள்ளிட்ட பகுதிகளிலும் வெப்பநிலை 37°C-ஐ கடந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய வெப்பநிலை 40°C-க்கு மிகவும் நெருக்கமாக உள்ளதாகவும், எதிர்காலத்தில் 1983ஆம் ஆண்டு பதிவான அதிகபட்ச வெப்பநிலை முறியடிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் மலித் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் பல பகுதிகளில் வழமையை விட குறைவான மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். தென்மேற்கு பகுதிகளில் வழமையான மழைவீழ்ச்சி காணப்படலாம் எனவும், ஏனைய பகுதிகளில் குறைவான மழைவீழ்ச்சி ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஒக்டோபர் மாதத்திற்குள் நிலைமை மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வழமையை விட அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக வானிலை முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன.

இதனால் இலங்கை வறட்சியை எதிர்கொள்ளுமா அல்லது வெள்ளப்பெருக்கை எதிர்கொள்ளுமா என்பதைத் தற்போது நேரடியாகக் கூற முடியாது என மலித் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மாறிவரும் காலநிலை காரணமாக சில காலகட்டங்களில் வறட்சியும், வேறு காலகட்டங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் எல் நினோ தாக்கம் காரணமாக நாட்டின் 7 மாவட்டங்களைச் சேர்ந்த 81,865 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த மாவட்டங்களில் உள்ள 23 பிரதேச செயலகப் பிரிவுகள் வறண்ட காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, 25,628 குடும்பங்களைச் சேர்ந்த 81,865 பேர் எல் நினோ தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், 20 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 23,048 குடும்பங்களைச் சேர்ந்த 72,153 பேருக்கு குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, 23,048 குடும்பங்களைச் சேர்ந்த 72,153 பேருக்கு குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அதிகளவிலான குடிநீர் மொனராகலை மாவட்டத்திற்கே விநியோகிக்கப்படுகிறது. அங்கு 7 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 10,264 குடும்பங்களின் 33,023 பேருக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் 8 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 9,547 குடும்பங்களின் 28,523 பேருக்கும் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அம்பாறை மாவட்டத்தின் 2 பிரதேச செயலகப் பிரிவுகளில் பாதிக்கப்பட்டுள்ள 2,537 குடும்பங்களைச் சேர்ந்த 7,882 பேருக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

No comments: