News Just In

8/31/2026 10:43:00 AM

22வது அரசியலமைப்புத் திருத்தம் தொடரும் – நீதி அமைச்சர் திட்டவட்டம்!

22வது அரசியலமைப்புத் திருத்தம் தொடரும் – நீதி அமைச்சர் திட்டவட்டம்!



உத்தேச 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை அரசாங்கம் கைவிடாது என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

நீதித்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் நடவடிக்கை குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் அனுகூலம் அளிக்கும் வகையில் மேற்கொள்ளப்படுவதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டையும் அவர் நிராகரித்துள்ளார்.

ஓய்வுபெறும் வயது நீடிப்பு ஒட்டுமொத்த நீதித்துறைக்கும் பொருந்தும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

பல ஆண்டுகளாக முறையான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படாததன் காரணமாக நீதித்துறையில் சுமார் 11 இலட்சம் வழக்குகள் தேங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஊழல் மற்றும் மோசடிகளுடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதுடன், நீதித்துறையை மேலும் வலுப்படுத்துவதும் அரசாங்கத்தின் பிரதான வாக்குறுதிகளில் ஒன்றாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நடவடிக்கைகளின் உறுதியான பலன்களை இந்த ஆண்டின் இறுதிக்குள் மக்கள் காணக்கூடியதாக இருக்கும் எனவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 22-ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வதற்கான காலவகாசம் இன்றுடன் (31) நிறைவடைகின்றது.

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவால் கடந்த 18 ஆம் திகதி 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உட்பட பல சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இச்சட்ட மூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக இதுவரை 27 மனுக்களும், அதற்கு ஆதரவாக 3 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments: