சமூக அக்கறையுடனான ஊடகப் பணியின் மூலம் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ள Social TV நிறுவனத்தின் 6ஆவது ஆண்டு நிறைவு விழா, சனிக்கிழமை (11) நிந்தவூரில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
நிறுவனத்தின் நிறுவனரும் பணிப்பாளருமான என்.எம்.முஹம்மத் சிறாஜ் அவர்களின் நெறிப்படுத்தலில் Social TV-யின் ஊடக ஆலோசகரும், அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப்பணிப்பாளருமான எம்.ஏ.சி.எம்.றியாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.அஷ்ரப் தாஹிர் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
கௌரவ அதிதியாக நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி ரியாஸ் ஆதம் கலந்து கொண்டதுடன், நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எல்.எம்.லத்தீப், கிழக்கு மாகாண சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை சேவைகள் திணைக்கள ஆணையாளர் எம்.பி.முஹம்மத் சுஃப்யான், கிழக்கின் கேடயம் பிரதானியும், அக்கரைப்பற்று மாநகர உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ், நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மதத் தலைவர்கள், அரச அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் நிகழ்வில் பங்கேற்றனர்.
விழாவின் முக்கிய அம்சமாக, கடந்த ஆறு ஆண்டுகால நிறுவனத்தின் ஊடகப் பயணத்தைப் பதிவு செய்யும் "வெற்றிப் பயணம் 2020–2026" என்ற நினைவு நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. அத்துடன், சமூக மாற்றத்திற்காக ஊடகத்துறை உட்பட பல்வேறு துறைகளில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய ஊடகவியலாளர்கள் மற்றும் சாதனையாளர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன. ஊடகப் பொறுப்புணர்வு, சமூக சேவை மற்றும் மனிதநேயப் பணிகளை முன்னிறுத்தி நடைபெற்ற இந்த ஆண்டு விழா, பெருந்திரளான விருந்தினர்கள் மற்றும் பொதுமக்களின் பங்கேற்புடன் சிறப்பாக நிறைவுற்றது
No comments: