News Just In

7/10/2026 06:45:00 AM

JVP புலமை சொத்து திருட்டு; ரில்வினுக்கு ரூ. 1 மில்லியன் செலுத்த விமலுக்கு உத்தரவு

JVP புலமை சொத்து திருட்டு; ரில்வினுக்கு ரூ. 1 மில்லியன் செலுத்த விமலுக்கு உத்தரவு




தனது அனுமதியின்றி ஆவணங்களைப் பயன்படுத்தி புத்தக வெளியீடு செய்தமைக்காக, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், ரில்வின் சில்வாவுக்கு ரூ. 1 மில்லியன் இழப்பீடு வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

JVP பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, விமல் வீரவன்சவுக்கு எதிராக இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார்.

2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவளிப்பது மற்றும் அரசாங்கத்தில் இணைவது தொடர்பாக ரில்வின் சில்வாவினால் ஜேவிபி மத்திய குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை, விமல் வீரவன்ச தனது “நெத்த வெனுவட்ட எத்த” என்ற புத்தகத்தில் அனுமதியின்றிப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

ரில்வின் சில்வாவால் எழுதப்பட்ட குறித்த ஆவணங்கள் 2003ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க புலமை சொத்துச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட வேண்டிய அசல் படைப்புகள் எனவும், விமல் வீரவன்ச குறித்த ஆவணங்களை முழுமையாகத் தனது புத்தகத்தில் சேர்த்ததன் மூலம் ரில்வின் சில்வாவின் பொருளாதார மற்றும் தார்மீக உரிமைகளை மீறியுள்ளார் எனவும், இது அரசியலாய்வுக்காகவோ அல்லது பொது நலனுக்காகவோ செய்யப்பட்ட ‘நியாயமான பயன்பாடு’ அல்ல என்றும், இலாப நோக்கத்திற்காக முழுமையான படைப்பும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

விமல் வீரவன்ச இப்புத்தகத்தின் மூலம் சுமார் ரூ. 13 மில்லியன் இலாபம் ஈட்டியுள்ளதை அவதானித்த நீதிமன்றம், ரில்வின் சில்வாவுக்கு ரூ. 1 மில்லியனை சட்டரீதியான இழப்பீடாக வழங்குமாறு உத்தரவிட்டது.

எவ்வாறாயினும், விமல் வீரவன்சவின் முழுப் புத்தகத்தையும் தடை செய்யாமல், ரில்வின் சில்வாவின் படைப்புகள் அடங்கிய பகுதிகளை மட்டும் விற்பனை செய்யவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது என நீதிமன்றம் தடையுத்தரவை மாற்றியமைத்துள்ளது.

நீதியரசர்களான ஜனக் டி சில்வா, கலாநிதி சோபித ராஜகருணா மற்றும் எம் சம்பத் கேபி விஜேரத்ன ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இந்தத் தீர்ப்பை வழங்கியது.

இந்தத் தீர்ப்பு இலங்கையில் புலமை சொத்துரிமை மற்றும் பதிப்புரிமைச் சட்டத்தின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

No comments: