News Just In

7/23/2026 05:53:00 PM

கறுப்பு ஜீலை இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட வேண்டும் - ஐங்கரநேசன் கோரிக்கை!


கறுப்பு ஜீலை இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட வேண்டும் - ஐங்கரநேசன் கோரிக்கை!



ஈழத்தமிழ் மக்களின் வரலாற்றுப் பேரவலத்தில் ஒன்றான கறுப்பு  ஜுலை இனக்கலவரம் அரங்கேறி 43 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இத்தனை ஆண்டுகளைக் கடந்தும் இதுவரையில் 1983  ஜுலையில் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளின் நினைவாக ஒரு முறையான நினைவுச்சின்னம் அமைக்கப்படாமல் இருப்பது பெரும் வரலாற்றுத் தவறு ஆகும்.

இது இறந்த காலத்தை நினைத்து அழுவதற்கானது அல்ல இது ஆக்கிரமிப்புக்கு எதிரான எதிர்காலப் போராட்டத்தின் ஒரு வடிவமும் ஆகும். அந்த வகையில் 2027  ஜுலைக்கு முன்னதாகவாவது 1983 இனக்கலவரத்தில் படுகொலை செய்யப்பட்ட அனைத்துத் தமிழ் மக்களையும் நினைவுகூரும் வகையில் பொது நினைவுச்சின்னம் ஒன்று அமைக்கப்படல் வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

1983 கறுப்பு ஜுலை இனக்கலவரத்தின் நினைவை முன்னிட்டு பொ.ஐங்கரநேசன் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தனது கோரிக்கையை முன்வைத்துள்ளார். அவர் தனது ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,

1983 ஜுலையில் நிகழ்ந்தது இரு சமூகங்களுக்கிடையே வெடித்த ஒரு சாதாரண கலவரம் அல்ல. அது, அப்போதைய பேரினவாத அரசாங்கத்தின் முழுமையான ஆசீர்வாதத்தோடும், அனுசரணையோடும் அரச இயந்திரங்களையும், வாக்காளர் பட்டியல்களையும் பயன்படுத்தித் தமிழ் மக்களை இனங்கண்டு மிகத் துல்லியமாக நடாத்தப்பட்ட திட்டமிடப்பட்ட ஓர் இனப்படுகொலை ஆகும். கொழும்பில் ஆரம்பித்துத் தென் இலங்கையின் பிறபகுதிகளுக்கும் மலையகத்துக்கும் பரவிய பேரினவாத வெறியாட்டத்தில் வெலிக்கடைச் சிறையில் கைதிகளாக இருந்த 53 பேர் உட்பட 3000 தமிழர்கள் வரையில் படுகொலை செய்யப்பட்டார்கள்.

ஜு லை இனக்கலவரம் தமிழ் மக்களின் உயிர்களை மாத்திரம் பலியெடுக்கவில்லை. அவர்களின் வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அனைத்தும் திட்டமிட்டுத் தீக்கிரையாக்கப்பட்டன. ஈழத்தமிழர்கள் பொருளாதார ரீதியாகத் தற்சார்பு அடைந்து விடக்கூடாது என்பதற்காகத் தமிழர்களின் பல தசாப்தகாலப் பொருளாதாரக் கட்டமைப்புகள் ஒரே வாரத்துக்குள் முற்றாகச் சிதைக்கப்பட்டன. தமிழ் மக்கள் வெறும் கையினர்களாக அங்கிருந்து கப்பலில் ஏற்றி யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். இந்த வரலாற்றுத் துயரங்களை மறப்போம் மன்னிப்போம் என்று கூறிவிட்டு நாம் கடந்து செல்ல முடியாது.

எமது நெஞ்சில் ஆறாத வடுவாக இருக்கும் இந்த வரலாற்றுப் பேரவலத்தின் பின்னணியையும், அதன் மூலம் தமிழ் இனம் கற்றுக்கொண்ட அரசியல் பாடங்களையும் எமது அடுத்த தலைமுறைகளுக்குக் கடத்துவது முதன்மையான தேசியக் கடமையாகும். இந்த வரலாற்றுக் கடத்துகைக்கு நினைவேந்தல்களும், நினைவுச் சின்னங்களும் அவசியமானவை ஆகும். எனவே, கறுப்பு  ஜுலையில் எமது இனம் இழந்த உயிர்களின் சாட்சியாகவும், எமது தேசிய விடுதலைப் பயணத்தின் வழிகாட்டியாகவும் பொருத்தமானதொரு இடத்தில் 1983 கறுப்பு ஜுலை நினைவுச்சின்னம் நிறுவப்படல் வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்

No comments: