மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தளவாய் புதிய வீட்டுத்திட்ட மக்கள், தமது கிராமத்துக்கான வீதியை புனரமைத்துத் தருமாறு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தளவாய் புதிய வீட்டுத்திட்ட கிராம மக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.
நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் மோசமான நிலையில் காணப்படும் இவ்வீதியால் தாம் அன்றாடம் எதிர்கொள்ளும் போக்குவரத்து அசௌகரியங்கள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கவலை வெளியிட்டனர்.
ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ. சிறிநாத் ஏறாவூர் நகரசபை உறுப்பினர் சு.ரகுவரன் மற்றும் செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் க.நாகேந்திரன் ஆகியோர் நேரில் சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தனர்.
இதன்போது வீதிப் புனரமைப்பை விரைவுபடுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டக்காரர்களினால் பாராளுமன்ற உறுப்பினரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
மக்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர், இது குறித்து உரிய அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுசென்று தீர்வு பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
No comments: