
நாட்டில் நிலவும் கடுமையான தாதியர் வெற்றிடத்துக்கு தீர்வு காணும் வகையில், ஓய்வு பெறவுள்ள தாதியர்களின் பணிக்காலத்தை இரண்டு வருடங்களால் நீடிக்குமாறு அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பான கடிதத்தை சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் நேற்று (14) ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
நாட்டில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 50,000 ஐத் தாண்டியுள்ளது. வீடுகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளைக் கணக்கிட்டால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கக்கூடும் என்று அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், அவர்களைப் பராமரிக்கத் தேவையான தாதியர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பது நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் புதிய தாதியர்களை ஆட்சேர்ப்பதற்குத் தயாராக இருந்தாலும், அவர்களுக்குப் பயிற்சி அளித்து சேவையில் இணைப்பதற்கு இன்னும் மூன்று ஆண்டுகள் தேவைப்படும்.
தற்போதைய நிலையில் நிலவும் தாதியர் பற்றாக்குறையினால், ஒரு தாதியர் மூன்று பேரின் பணிச்சுமையைச் சுமக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கடுமையான பணிச்சுமை காரணமாக தாதியர்களும் நோய்வாய்ப்படும் அபாயம் உள்ளதாகவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நெருக்கடியான சூழலைத் தணிப்பதற்காக, ஓய்வு பெறவுள்ள தாதியர்களின் வயது வரம்பை இரண்டு வருடங்களால் நீடிப்பதற்கு ஜனாதிபதி தனது நேரடி மற்றும் விசேட கவனத்தைச் செலுத்த வேண்டும் என அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் தனது கடிதத்தில் கோரியுள்ளது.
No comments: