இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கம் நடத்திய 2026ஆம் ஆண்டுக்கான 15 வயதுக்குட்பட்ட டிவிஷன்–03 கடினபந்து கிரிக்கெட் தொடரில், பொல்வத்தை மகா வித்தியாலயத்தை இன்னிங்ஸ் மற்றும் 185 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
அம்பாறை வீரசிங்க விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கல்முனை ஸாஹிறா முதலில் துடுப்பெடுத்தாடி, 36.5 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 281 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தனது முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.
பதிலுக்கு களமிறங்கிய பொல்வத்தை மகா வித்தியாலய அணி, ஸாஹிறா பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து வெறும் 31 ஓட்டங்களையே பெற்றது. இதன்மூலம் ஸாஹிறா அணி பாரிய முதல் இன்னிங்ஸ் முன்னிலையைப் பெற்றது.
தொடர்ந்து பொல்வத்தை அணிக்கு இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடும் வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், அந்த அணியினர் மீண்டும் அனைத்து விக்கெட்களையும் இழந்து 68 ஓட்டங்களை மட்டுமே பெற்றனர். இதனால் கல்முனை ஸாஹிறா அணி இன்னிங்ஸ் மற்றும் 185 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை தனதாக்கிக் கொண்டது.
போட்டியில் ஸாஹிறா அணிக்காக அஹ்தீர் ஆட்டமிழக்காமல் 68 ஓட்டங்களைப் பெற்றதுடன், இரண்டு இன்னிங்ஸ்களிலும் தலா 3 விக்கெட்களை வீழ்த்தி ஆல்-ரவுண்டர் திறமையை வெளிப்படுத்தினார்.
ரிப்பத் 53 ஓட்டங்களைப் பெற்றதுடன், இரு இன்னிங்ஸ்களிலும் மொத்தமாக 5 விக்கெட்களை கைப்பற்றினார். மேலும், அம்மார் அஹமட் இரு இன்னிங்ஸ்களிலும் தலா 6 விக்கெட்களை வீழ்த்தி போட்டியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். ஜாபீர், இணைப்பாடவிதானப் பொறுப்பதிபர் எஸ். முபாரக், அணியின் பொறுப்பாசிரியரும் பயிற்சியாளருமான எம்.எம். ரஜீப், பயிற்சியாளர் எம். ஜப்ரான் ஆதம்பாபா உள்ளிட்டோருக்கு பாடசாலை சமூகம் தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது.
No comments: