News Just In

7/23/2026 04:22:00 PM

பாசிக்குடாவைச் சூழவுள்ள 10 கிலோமீற்றர் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய ஏற்பாடு

பாசிக்குடாவைச் சூழவுள்ள 10 கிலோமீற்றர் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய ஏற்பாடு



(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தினூடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை வலுப்படுத்தி உள்ளுர் மக்களின் பொருளாதார முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது.

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி சிறிகாந்த் தலைமையில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் வி. நவநிதனின் ஏற்பாட்டில் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இந்தக் கலந்துரையாடல் வியாழனன்று நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற சுற்றுலா இடங்களான பாசிக்குடாவையும் அதனைச் சூழவுள்ள 10 கிலோமீட்டர் சுற்றளவிலான பிரதேசங்களையும் சுற்றுலா அபிவிருத்தி செய்வதன் அவசியம் தொடர்பாக கலந்துரையாடலில் ஆலோசிக்கப்பட்டது.

மேலும், மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை திட்டமிட்ட முறையில் மேம்படுத்துவதுடன் புதிய தொழில் முயற்சியாளர்களை இணைத்துக் கொண்டு வேலைவாய்ப்புகளையும் வருமான வாய்ப்புகளையும் அதிகரிப்பது தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடல் இடம்பெற்றது.

அத்துடன், சமூக அடிப்படையிலான சுற்றுலா (Community-Based Tourism)), கடல்சார் சுற்றுலா வளங்களைப் பயன்படுத்துதல், சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துதல், உள்ளுர் தொழில் முனைவோருக்கு பயிற்சி, திறன் மேம்பாட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் ஆகிய விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.

பாசிக்குடா பிரதேசத்தில் சமூகப் பங்களிப்பை மையமாகக் கொண்ட சுற்றுலா வளர்ச்சியை ஏற்படுத்தி, அப்பகுதி மக்களுக்கு சமூக பொருளாதார நன்மைகளை அதிகரிப்பது தொடர்பாகவும் கரிசனை காட்டப்பட்;டது.

இந்நிகழ்வில் சீபா CEPA) நிறுவன அதிகாரி கலாநிதி எஸ். தயானந், நிகழ்ச்சி திட்ட ஆலோசகர் எஸ். சஜித்

திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் ரீ. நிர்மலராஜ், விதாதா உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கைத்தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர், சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments: