News Just In

6/14/2026 10:33:00 AM

மிகவும் ஆபத்தான கட்டத்தில் இலங்கை - நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!

மிகவும் ஆபத்தான கட்டத்தில் இலங்கை - நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கை மீண்டுமொரு பொருளாதார நெருக்கடியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக நிதி மற்றும் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அதற்கான பல அறிகுறிகள் தற்போதைய பொருளாதார நடவடிக்கைகளில் தென்படத் தொடங்கியுள்ளதாகவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், அடுத்தாண்டில் இலங்கை பொருளாதாரம் கடுமையான நெருக்கடிக்குள்ளாகும்.

நாடு ஏற்கனவே கடுமையான வெளிநாட்டு நாணய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வந்தது. அத்துடன், நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கமும் மத்திய வங்கியும் நாணயக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

உள்நாட்டு வெளிநாட்டு நாணய சந்தையில் டொலர்களை விற்பனை செய்து ரூபாயின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த இலங்கை மத்திய வங்கி முயன்றது. எனினும் அதுவொரு நிலையான தீர்வு அல்ல என நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கை கடந்த 2022ஆம் ஆண்டில் நாடு வரலாற்றின் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது. இருந்த போதிலும், அதிலிருந்து சரியான பாடங்களை கற்றுக்கொண்டு நிலையான வெளிநாட்டு நாணய வருமான வழிகளை அதிகரிக்கும் உத்திகளுக்கு மாறவில்லை என அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டமொன்றை நிறைவு செய்து கொண்டிருக்கும் பின்னணியிலும், நாடு மீண்டும் வெளிநாட்டு நாணய நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது.



கடன் மறுசீரமைப்பு மற்றும் செலுத்தும் திறனில் அதிக ஆபத்துள்ள மட்டத்தில் இருப்பதாக சர்வதேச நாணய நிதிய தனது புதிய ஆய்வு அறிக்கையின் மூலம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதை நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

2027ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டம் முடிவடைந்ததன் பின்னர், பொருளாதார மற்றும் வெளிநாட்டு நாணய நிர்வாகத்திற்கு இலங்கை தயாராக வேண்டும். அது மிகவும் சவாலானதாக இருக்கும் என நிபுணர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

No comments: