
இலங்கையில் நீண்டகாலமாக நடைமுறையில் உள்ள முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தை உடனடியாக இரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
சிங்கள ராவய தேசிய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் தலைமையிலான குழுவினர், குறித்த கோரிக்கையை முன்வைத்து இந்த முறைப்பாட்டை கையளித்துள்ளது.
1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டமானது, ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட சிறுவர் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைக்கு முரணாகவும், இலங்கையின் அரசியலமைப்பை மீறும் வகையிலும் அமைந்துள்ளது என்பதை வலியுறுத்தி இந்த முறைப்பாடு கையளிக்கப்பட்டது.
முறைப்பாட்டை கையளித்த பின்னர் சிங்கள ராவய தேசிய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் உடன்படிக்கையின்படி 18 வயது பூர்த்தியடையாத எவரும் சிறுவராகவே கருதப்படுகின்றனர்.
இனம், மதம், சாதி, குலம் அல்லது அரசியல் பின்னணி என எதுவாக இருந்தாலும் இந்த அடிப்படை வரையறையில் எந்த மாற்றமும் இருக்க முடியாது.
ஆனால், இலங்கையில் நடைமுறையில் உள்ள 1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டமானது, எமது நாடு ஏற்றுக்கொண்டுள்ள சர்வதேச உடன்படிக்கையை முற்றாக மீறும் வகையில் அமைந்துள்ளது.
அவ்வாறிருக்கையில், ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு மாத்திரம் இத்தகைய சட்ட ரீதியான சலுகைகளை வழங்கி, நாட்டின் பொதுச்சட்டத்தை விஞ்சும் இத்தகைய செயற்பாடுகளுக்கு அனுமதிப்பது அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும். மத ரீதியாகவோ அல்லது இன ரீதியாகவோ நாட்டின் சட்டங்களை மாற்றியமைக்க முடியாது.
அனைத்துப் பிரஜைகளும் சட்டத்தின் முன் சமமானவர்களே. இத்தனை காலமும் இவ்வாறானதொரு சட்ட ஏற்பாடு எவ்விதம் நடைமுறையில் இருந்தது என்பது எமக்கு பாரதூரமான கேள்வியாக உள்ளது.
இது சிறுவர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேசக் கடப்பாட்டையும், நாட்டின் அதியுயர் சட்டமான அரசியலமைப்பையும் மீறும் ஒரு செயற்பாடாகும்.
எனவே, இந்தச் சட்ட ஏற்பாடுகளை வன்மையாகக் கண்டிப்பதோடு, இந்த சட்டத்தை உடனடியாக ரத்து செய்வதற்குத் தேவையான துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையிடமும், அரசாங்கத்திடமும் நாம் வலியுறுத்துகிறோம்.
இது தொடர்பான சட்ட ரீதியான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவும், இந்த அநீதியான சட்டத்தை இல்லாதொழிக்கவும் தொடர்ந்து போராட எமது சிங்கள ராவய அமைப்பு தீர்மானித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
No comments: