
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தை குத்தகைக்குப் பெற்று நடத்துபவருக்கு எதிராக, பிரதேச மக்கள் திரண்டு எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
நீண்ட நாட்களாக அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல், டீசல் என எந்த எரிபொருளும் பொதுமக்களுக்கு வழங்கப்படாதிருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
மக்கள் தமது வாகனங்களுக்கான எரிபொருள் தேவையை பூர்த்தி செய்துகொள்ள எப்போது எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு சென்றாலும், எரிபொருள் இல்லை என்றே கூறப்படுவதாகவும் கயிற்றைக் கொண்டு நிரப்பு நிலையம் பூட்டப்பட்டே இருப்பதாகவும் அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
இன்று திங்கட்கிழமை (22) பிற்பகல் 3 மணியளவில் அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்பாக களுவாஞ்சிக்குடி வர்த்தக சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
களுவாஞ்சிக்குடி நகரில் மிக நீண்டகாலமாக இயங்கிவரும் இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை குத்தகைக்குப் பெற்றவர் உரிய முறையில் நடாத்தவில்லை.
இவ்வருடத்தில் குறைந்தது 200 நாட்களேனும் இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் முற்றாக வழங்கப்படவில்லை. இந்நிலையத்தில் பெற்றோல், டீசல் இல்லை என்று அறிவிக்கப்பட்டு, எரிபொருள் நிலையத்துக்குள் எவரும் உட்பிரவேசிக்க இயலாதவாறு கயிறு கட்டப்பட்டுள்ளது.
அந்த பிரதேசமானது, விவசாயம் மற்றும் மீன்பிடி உள்ளிட்ட தொழில்களை வாழ்வாதாரமாகக் கொண்ட மக்கள் அதிகளவில் வசிக்கும் பிரதேசம் ஆகும். அப்பகுதியில் அதிகளவு அரச உத்தியோகத்தர்கள் உள்ளனர். முச்சக்கரவண்டிகளும் அதிகமாக இயங்குகின்றன. அருகில் தேசிய பாடசாலை, வைத்தியசாலை, வர்த்தக நிலையங்கள் முதலியவை அமைந்துள்ளன.
இந்நிலையில் இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு எப்போது சென்றாலும் பெற்றோல், டீசல் இல்லாத நிலைமையே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

எரிபொருள் நிரப்பு நிலையம் தொடர்பான பிரச்சினை குறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகையில்,
நாட்டில் எரிபொருள் இல்லை என்றால் அது அரசாங்கம் கையாளவேண்டிய பிரச்சினையாகும். ஆனால், நாட்டில் எரிபொருள் இருந்தும் களுவாஞ்சிக்குடி நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் இல்லாத நிலைமையே காணப்படுகிறது.
எனவே, அரசாங்கம் இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை குத்தகைக்கு வழங்கியவரிடமிருந்து, இந்நிலையத்தை மீளப் பெற்று, இதை 24 மணிநேரமும், வருடத்தின் 365 நாட்களும் எரிபொருள் வழங்கும் தகுதி உடையவருக்கு வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
களுவாஞ்சிக்குடி வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் களுவாஞ்சிக்குடி முச்சக்கரவண்டி சாரதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு பதாகைகளை எந்தியவாறு கோஷம் எழுப்பினர்.
களுவாஞ்சிக்குடி பொலிஸாரும் ஆர்ப்பாட்டத்துக்கு வருகை தந்து பிரச்சினையை கேட்டறிந்தனர்.
அதன் பின்னர் எரிபொருள் பிரச்சினைக்கு மிக விரைவில் தீர்வு கிடைக்கவில்லையாயின், மீண்டும் தாம் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்து, போராட்டத்தை நிறுத்திவிட்டு, புறப்பட்டுச் சென்றனர்.


No comments: