
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்றாநோய்களின் தாக்கம் அதிகரிப்பதற்கு புகைத்தலே பிரதான காரணமாக அமைந்திருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட தொற்றாநோய் தடுப்பு பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.ருதேசன் தெரிவித்துள்ளார்.
எனவே, மட்டக்களப்பை புகைத்தலற்ற ஒரு மாவட்டமாக மாற்றுவதற்கு அனைத்துத் துறையினரும் தங்களது பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
சர்வதேச புகைத்தல் ஒழிப்பு வாரத்தின் இரண்டாம் நாளை முன்னிட்டு, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து நடத்திய விசேட விழிப்புணர்வு நிகழ்வு இன்று (01) திங்கட்கிழமை நடைபெற்றது. மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் இந்நிழ்வு நடைபெற்றது.
இதன்போது, மட்டக்களப்பு மாநகரசபையை புகைப்பொருள் பாவனையற்ற மாநகரசபையாக பிரகடனப்படுத்தும் வகையிலான பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டதுடன், புகையிலை பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. விசேடமாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் நுழைவாயிலில் “சிகரெட் நாற்றமில்லாத பகுதிக்கு உங்களை வரவேற்கின்றோம்” என்னும் பெயர்ப்பலகை திறந்து வைக்கப்பட்டதுடன், முச்சக்கரவண்டிகள் மற்றும் உணவகங்களிலும் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.
இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த வைத்திய அதிகாரி எம்.ருதேசன் மேலும் குறிப்பிட்டதாவது,
"உலகளாவிய ரீதியிலும் சுகாதாரத் துறைக்கும் பாரிய சவாலாக விளங்குவது தொற்றாநோய்களாகும். தடுத்து நிறுத்தக்கூடிய ஆபத்துக் காரணிகளுக்குள் மிகவும் முதன்மையான ஒன்றாக இந்த புகைத்தல் காணப்படுகின்றது. மனித மரணங்களுக்கான முதலாவது காரணியாக விளங்கும் மாரடைப்பு மற்றும் குருதி அமுக்கம் , பக்கவாதம் போன்ற சுற்றோட்டத் தொகுதி சார்ந்த நோய்களை புகைத்தல் ஏற்படுத்துகின்றது.
அதுமட்டுமன்றி, நுரையீரல் புற்றுநோய், வாய்க்குள் ஏற்படும் புற்றுநோய், தொண்டை மற்றும் உணவுக்காளப் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு புற்றுநோய்களுக்கும், கடுமையான சுவாசப் பை நோய்களுக்கும் இது காரணியாக அமைகின்றது. நாம் பல விழிப்புணர்வுகளைச் செய்தாலும், வர்த்தகத் துறையினர் கவர்ச்சியான சலுகைகளுடன் விளம்பரங்களைச் செய்வதால் எமது முயற்சிகள் மக்களைச் சென்றடைவது குறைவாக உள்ளது."
மட்டக்களப்பு மாநகர சபையை புகைத்தல் அற்ற பகுதியாக மாற்றுவதற்கான முழுமையான ஏற்பாடுகளை மாநகர சபை முதல்வர் மேற்கொள்வார் என தாம் நம்புவதாகத் தெரிவித்த அவர், கல்வித்துறை, நிர்வாகத்துறை, வர்த்தகத்துறை உள்ளிட்ட சகல துறையினரும் இதற்கு ஆதரவளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
பாடசாலைகளுக்கு அருகில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால், அது குறித்து ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் மாணவர்கள் உரிய அதிகாரிகளுக்குத் தகவல் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
வைத்தியசாலைகள், பாடசாலைகள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட செயலகம் போன்ற முக்கிய பொது இடங்களுக்கு அருகில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை முற்றாகத் தடை செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், 21 வயதுக்குட்பட்டவர்களுக்கும் மாணவர்களுக்கும் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதற்கு அனைவரும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் பிரதி பிராந்திய சுகாதார பணிப்பாளர் மோகனகுமார், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி இளையதம்பி உதயகுமார், மாவட்ட போதைப்பொருள் முன்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு இணைப்பாளர் ப.தினேஸ், வைத்திய நிபுணர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலை மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

No comments: