News Just In

6/14/2026 01:57:00 PM

சட்டவிரோத வைத்தியசாலையை இடித்து அகற்றுங்கள் : யாழ். இராணுவ தளபதிக்கு கடிதம்!

சட்டவிரோத வைத்தியசாலையை இடித்து அகற்றுங்கள் : யாழ். இராணுவ தளபதிக்கு  கடிதம்



யாழ்ப்பாணம் - வயாவிளான் பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்படும் இராணுவ வைத்தியசாலையினை இடித்து அகற்றுமாறு யாழ் இராணுவ தளபதிக்கு வலி வடக்கு பிரதேசபை தலைவர் சோ.சுகிர்தன் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதன்படி, எதிர்வரும் 16.06.2026 ஆம் திகதிக்குள் குறித்த வைத்தியசாலையை அகற்றாவிட்டால் மல்லாகம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படும் எனவும் அந்த கடிதத்தின் ஊடாக எச்சரித்துள்ளார்.

இது குறித்து வலி வடக்கு பிரதேசபை தலைவரால் அனுப்பப்பட்ட கடிதத்தில், யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைகளின் தலைமையகத்தைச் சேர்ந்த, பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியாகிய Major General KTP De Silva நகர அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தின் பிரிவு 8J, 28A இற்கமைவாக அனுமதியைப் பெறாதும் அங்கீகாரமின்றியும் அத்துமீறி தமக்குச் சொந்தமான ஆதனங்களினுள் வைத்தியசாலைக் கட்டிடம் அமைத்து வருவதாக ஆதன உரிமையாளர்கள் வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.

வயாவிளான் எனும் முகவரியில் அங்கீகாரமின்றி தங்களால் கட்டப்பட்ட கட்டிடத்தை 16.06.2026 ஆம் திகதிக்குள் உடன் இடித்தகற்றி ஆதனத்தினை பழைய நிலையில் விடுமாறும், அல்லது கட்டுமானப்பணியினை உடன் நிறுத்தி நிபந்தனைகளுக்கமைவாக அனுமதியினை பெறுமாறு கோரப்படுகிறீர்கள்.

16.06.2026 ஆம் திகதிக்குள் நடவடிக்கை எடுக்கத்தவறும் பட்சத்தில் தங்களுக்கு எதிராக அங்கீகாரமின்றி தங்களால் கட்டப்பட்ட கட்டிடப் பகுதியானது அகற்றப்படுவதற்கும், அகற்றப்படுவதற்குரிய செலவினையும் தங்களிடமிருந்து பெற்று கொள்வதற்குமான கட்டளையொன்றினைப் பெறுவதற்காக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படுமென்றும் தங்களுக்கு இத்தால் அறிவிக்கப்படுகின்றது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: