கடந்த கால அரசுகளால் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட, நில அபகரிப்பு குறித்த சமூக அனுபவங்களை ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
சமூக உருமாற்றத்திற்கான நடவடிக்கைகளை எளிதாக்குதல் (FACT) எனும் அமைப்பு, “அரசால் அந்நியப்படுத்தப்பட்டவர்கள்: இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அரச கொள்கைகள் மற்றும் திட்டங்கள் மூலமான நில அந்நியப்படுத்தல் குறித்த ஓர் ஆய்வு" என்ற 48 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை வெளியிட்டு வைத்துள்ளது.
திருகோணமலை உப்புவெளி தனியார் விடுதி கேட்போர் அரங்கில் இடம்பெற்ற மேற்படி அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் அதிதிகளாக இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான சுவிட்சர்லாந்து தூதர் டொக்டர் சிரி வால்ட், தூதரகத்தின் முதல் செயலாளர் ஜஸ்டின் பொய்லாற் ஆகியோரிடமும் மற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட செயற்பாட்டாளர்களிடமும் அறிக்கையின் பிரதிகள் கையளிக்கப்பட்டன.
இந்த அறிக்கை, நிலம் கையகப்படுத்துதல், மேலாண்மை, மறு விநியோகம் மற்றும் நிர்வாகம் தொடர்பான அரச கொள்கைகளையும் நடைமுறைகளையும் கிழக்கு மாகாணத்தில் உள்ள சமூகங்கள், எவ்வாறு அனுபவிக்கின்றன என்பதை ஆராய்கிறது.
பக்ற் அமைப்பின் தலைவர் ஏ. சொர்ணலிங்கம் தலைமையில் இடம்பெற்ற ஆய்வறிக்கை வெளியீட்டு நிகழ்வில் சமூக உருமாற்றத்திற்கான நடவடிக்கைகளை எளிதாக்குதல் அமைப்பின் இணை ஸ்தாபகரும் பணிப்பாளருமான மேகலா மகிழ்ராஜா, சட்டம் சமூக நம்பிக்கை நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் சட்டத்தரணி சந்துன்துடுகல, கிழக்குப் பல்கவைலக்கழக நுண்கலைத்துறைப் பீட பேராசிரியர் எஸ். ஜெயசங்கர், பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியரும் ஆய்வுக் குழுவின் தலைவருமான ஏ. சர்ஜுன் உட்பட துறைசார்ந்த நிபுணர்கள், ஆய்வாளர்கள், செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
வெளியிடப்பட்ட அந்த ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்த ஆய்வு, கிழக்கு மாகாணம் முழுவதும் 400 பதிலளிப்பாளர்களிடம் நடத்தப்பட்ட ஒரு அளவுசார் கணக்கெடுப்பை உள்ளடக்கிய, கலப்பு-முறை வடிவமைப்பைப் பயன்படுத்தி, 2023ஃ2024-ஆம் ஆண்டில் கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி வல்லுநர்களைக் கொண்ட ஒரு பல்துறை குழுவால் நடத்தப்பட்டது.
அதில், கல் ஓயா, மகாவலி அபிவிருத்தித் திட்டங்கள், சுனாமிக்குப் பிந்தைய குடியேற்றத் திட்டங்கள், மற்றும் தொல்லியல், வனப் பாதுகாப்பு, வனவிலங்குப் பாதுகாப்புத் துறைகள் மற்றும் பொது நிர்வாகச் செயல்முறைகள் உள்ளிட்ட அரசு நிறுவனங்களின் நடவடிக்கைகள் ஆகிய நான்கு முக்கியத் தளங்களிலிருந்து எழும் நில அபகரிப்பு குறித்த சமூக அனுபவங்கள் ஆராயப்பட்டுள்ளன.
அரசின் நில அபகரிப்புக் கொள்கைகள், குறிப்பாக கிராமப்புற விவசாயிகள், இடம்பெயர்ந்த சமூகங்கள் மற்றும் இன சிறுபான்மையினர் போன்ற பல்வேறு இன மற்றும் வாழ்வாதாரக் குழுக்களை எவ்வாறு பாதித்துள்ளன என்பது குறித்த கள அடிப்படையிலான பகுப்பாய்வை இந்த ஆய்வு வழங்குகிறது.
நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மறுவிநியோகத்தை நிர்வகிக்கும் பல கொள்கைகளும் திட்டங்களும், அரை நூற்றாண்டுக்கும் மேலாக முன்பு உருவாக்கப்பட்ட சட்டங்களில் வேரூன்றியுள்ளன என்பதை ஆய்வின் முடிவுகள் காட்டுகின்றன.
திருத்தங்கள் செய்யப்பட்ட போதிலும், இந்தக் கட்டமைப்புகள் அரசுக்கு விகிதாசாரமற்ற அதிகாரத்தைத் தொடர்ந்து வழங்கி, அரசால் இயக்கப்படும் நில அபகரிப்பு நீடிக்க வழிவகுக்கின்றன.
இதனால் இன-மத சிறுபான்மையினரும், பெண்களும் மிகக் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர்;. அவர்கள் அதிக பாதிப்புக்குள்ளாகும் தன்மை, பாதுகாப்பின்மை மற்றும் விலக்கப்படுதல் ஆகியவற்றை அனுபவிக்கின்றனர்.
சீரான மற்றும் சமத்துவமான நில நிர்வாகத்தை உறுதி செய்வதற்காக ஒரு தேசிய நில ஆணைக்குழுவை நிறுவுதல்;, நிலம் கையகப்படுத்துதல், மறுவிநியோகம் மற்றும் நிர்வாகம் தொடர்பான காலாவதியான கொள்கைகள் மற்றும் திட்டங்களைத் திருத்தியமைத்தல்; மற்றும் பாரபட்சங்களையும், கட்டமைப்பு ரீதியான சமத்துவமின்மைகளையும் உள்ளடக்கிய ஒரு விரிவான தேசிய நிலக் கொள்கையை உருவாக்குதல் உள்ளிட்ட பல கொள்கை மற்றும் நிறுவன சீர்திருத்தங்களை இந்த ஆய்வு முன்மொழிகிறது.” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: