News Just In

6/06/2026 05:28:00 PM

செய்தித்தாளில் வழங்கப்பட்ட உணவு..! சுரேஷ் சலேசாகும்வரை உண்ணாவிரம் உதய கம்மன்பில தெரிவிப்பு !

செய்தித்தாளில் வழங்கப்பட்ட உணவு..!  சுரேஷ் சலேசாகும்வரை உண்ணாவிரம் உதய கம்மன்பில தெரிவிப்பு 


அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, சாகும் வரையான உண்ணாவிரதமொன்றைத் தொடங்கியுள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(6) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் பிவிதுரு ஹெல உருமய தலைவர் உதய கம்மன்பில இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

சலேயின் மனைவி மற்றும் மகனின் வேண்டுகோளின் பேரில் ஊடகங்களிடம் பேசிய கம்மன்பில,

இந்த உண்ணாவிரதத்தின் போது, ​​அவர் உணவு மட்டுமல்லாமல், அத்தியாவசியமான தண்ணீர் மற்றும் மருந்துகளையும் மறுத்துவிட்டதாகக் கூறினார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் தனக்கு இழைக்கப்பட்ட மனிதாபிமானமற்ற சித்திரவதை மற்றும் இழிவான நடத்தையைக் கண்டித்து, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே சாகும் வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சலே தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தில் நிலவும் மனிதாபிமானமற்ற நிலைமைகளை விளக்கிய கம்மன்பில, எடுத்துக் காட்டாக ஒரு சம்பவத்தை குறிப்பிட்டுள்ளார்.

நேற்று இரவு, சலேவுக்கு உணவாக முள்ளங்கி குழம்புடன் ஒரு கரண்டி சோறு மட்டுமே வழங்கப்பட்டது என்றும், அதுவும் தட்டில் வைக்கப்படாமல், தரையில் விரிக்கப்பட்ட ஒரு செய்தித்தாள் பேப்பரில் வைத்து வழங்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.



செய்தித்தாள் குழம்பில் நனைந்து கிழிந்து போனதால், உணவு அனைத்தும் தரையில் விழுந்துவிட்டதாகவும், அதனால் அவர் கடுமையான மனநல பாதிப்புக்கு உள்ளானதாகவும் கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை சலேவின் சகோதரரும் மகனும் அவரைப் பார்க்கச் சென்றபோது, 'பொலிசார் என்னை ஒரு நாயை விட மோசமாக நடத்துகின்றனர்.. இதை அனுபவிக்க நான் என்ன தவறு செய்தேன்?' என்று அழுதுகொண்டே அவர் கேட்டுள்ளார்.

​​இத்தகைய மனிதாபிமானமற்ற சித்திரவதை மற்றும் பொய்க் குற்றச்சாட்டுகளின் கீழ் வாழ்வதை விட இறப்பதே மேல் என்று அவரைச் சுற்றிலும் நின்றிருந்த ஏழு பொலிஸ் அதிகாரிகளின் முன்னிலையில் சலே கூறியிருந்தார்.

சுரேஷ் சலே நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்படவில்லை என்றும், மாறாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பேரிலேயே அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்றும் உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தத் தடுப்புக் காவல் உத்தரவு ஏற்கனவே நீதிமன்றங்களின் முன்னிலையில் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

முன்னாள் புலனாய்வுத் தலைவர் ஒருவருக்கு எதிரான இந்த நடவடிக்கை ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்படுகிறது என்றும், இது மிகவும் வெட்கக்கேடானது மற்றும் மனிதாபிமானமற்றது என்றும் உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: