News Just In

6/14/2026 02:00:00 PM

44 ஆண்டுகளைக் கடந்தும் தொடரும் கொடிய சட்டம்! நிரபராதிகளின் ஆயுள் சிறைகளிலேயே முடிகின்றது! சட்டத்தரணி தவராசா கவலை

44 ஆண்டுகளைக் கடந்தும் தொடரும் கொடிய சட்டம்! நிரபராதிகளின் ஆயுள் சிறைகளிலேயே முடிகின்றது! சட்டத்தரணி தவராசா கவலை



இலங்கையில் தற்காலிக ஏற்பாடாகக் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம், 44 ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்று ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தெரிவித்தார்.

இந்தக் கொடூரமான சட்டத்தின் காரணமாகக் குற்றமற்ற பல நிரபராதிகளின் ஒட்டுமொத்த ஆயுட்காலமும் கூட சிறையிலேயே முடிவடையும் மிக மோசமான நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கான விசாரணைக் காலம், சட்டமா அதிபர் திணைக்களத்தால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் காலம் மற்றும் நீதிமன்ற விசாரணை முடிவடையும் காலம் ஆகியவற்றுக்கு எந்தவொரு சட்டபூர்வ காலவரையறையும் இல்லை.

பாதுகாப்பு அமைச்சரின் (ஜனாதிபதி) அனுமதியுடன், ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் ஒருமுறை பொலிஸாரின் அறிக்கையின் அடிப்படையில் ஒருவரை 18 மாதங்கள் வரை தடுத்து வைக்க முடியும். இதனை நீதிமன்றத்தில் கூட கேள்விக்குட்படுத்த முடியாது.

இந்தச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் வழக்குகளில் 95 வீதமானவை, கைதிகளிடம் சித்திரவதைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் மூலம் பெறப்படும் 'சுய ஒப்புதல் வாக்குமூலங்களை' மாத்திரமே அடிப்படையாகக் கொண்டவை. இதனைத் தடுக்கும் பொருட்டு, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட 10 நாள்களுக்குள் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மனுக்களைத் தாக்கல் செய்து நாம் பல வழக்குகளை விரைவுபடுத்தினோம்.

யுத்தம் முடிவடைந்த பின்னரும்கூட தமிழ் இளைஞர்கள் மட்டுமன்றி ஊடகவியலாளர்கள், வங்கி முகாமையாளர்கள் எனப் பல தரப்பினரும் இந்தச் சட்டத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். நான் நேரில் வாதாடிய வழக்குகளில் பலர் 15 முதல் 18 ஆண்டுகள் வரை எவ்விதக் குற்றமுமின்றி சிறையிலிருந்துவிட்டு, இறுதியில் நீதிமன்றத்தால் 'நிரபராதிகள்' என விடுதலையாகியுள்ளனர்.

அதேபோன்று, 22 வருடங்களாக இன்னும் விசாரணைகளின்றி சிறையில் வாடும் கைதிகளும் உள்ளனர். இறுதியில் அவர்கள் நிரபராதி என நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டாலும், ஒரு மனிதனின் ஒட்டுமொத்த இளமைக் காலமும், ஆயுட்காலமும் சிறையிலேயே முழுமையாக வீணடிக்கப்பட்டு விடுகின்றது." - என்றார்.

No comments: