News Just In

5/27/2026 09:36:00 AM

நாய்கள், துப்பாக்கிகளை பயன்படுத்தி கப்பலில் இருந்தோரை அச்சுறுத்தினர் இஸ்ரேலின் பிடியிலிருந்து விடுதலையான சமீரா மெஹ்பூப்தீன்

நாய்கள், துப்பாக்கிகளை பயன்படுத்தி கப்பலில் இருந்தோரை அச்சுறுத்தினர்
இஸ்ரேலின் பிடியிலிருந்து விடுதலையான சமீரா மெஹ்பூப்தீன்





தனது விடுதலையை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்த இலங்கை அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிப்பதாக “சுமுத் ஃப்ளோட்டில்லா” என்ற மனிதாபிமான பயணத்தின் போது இஸ்ரேலிய படையினரால் கைது செய்யப்பட்ட இலங்கை செயற்பாட்டாளர் சமீரா மெஹ்பூப் தீன் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் நேற்று (26) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே சமீரா இந்தக் கருத்துகளை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

சைப்ரஸிக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் அவர்களது குழு தடுக்கப்பட்டதுடன், நான்கு நாட்கள் எந்தவித தொடர்பு வசதியும் இன்றி வைக்கப்பட்டிருந்ததாக கூறினார். தன்னை மூன்று நாட்கள் உணவும் தண்ணீரும் இன்றி ஒரு கண்டெய்னரில் அடைத்து வைத்திருந்ததாக தெரிவித்த அவர், இஸ்ரேலிய படையினர் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியதுடன், பயணத்தில் இருந்தவர்களை உடல் ரீதியாக தாக்கி முகத்திலும் உடலிலும் கடுமையான காயங்களை ஏற்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டினார். தன்னிடம் ஹிஜாபை அகற்றுமாறு கூறப்பட்ட போதும், அதற்கு மறுத்துவிட்டதாக சமீரா தெரிவித்தார். கப்பலில் இருந்தவர்களை அச்சுறுத்த துப்பாக்கிகளும் நாய்களும் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

உணர்ச்சிவசப்பட்டு பேசிய சமீரா, இத்தகைய செயல்கள் மனிதநேயமின்மையை வெளிப்படுத்துவதாகவும், இஸ்ரேலிய படையினரின் நடத்தையை ஊடகங்கள் உலகிற்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பாலஸ்தீன மக்கள் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நாளும் துன்புறுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டி, உலக மக்கள் பாலஸ்தீனத்துடன் ஒற்றுமையாக நிற்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

தனது விடுதலையை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்த இலங்கை அரசாங்கத்துக்கும், அதிகாரிகளுக்கும் மற்றும் பாலஸ்தீன தூதுவர் பவ்சர் பாரூக்கிற்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

சமீரா மெஹ்பூப் தீன் மீது இஸ்ரேலிய படையினர் மேற்கொண்டதாக கூறப்படும் கைது மற்றும் தடுப்பு தொடர்பாக, “ப்ரீ பாலஸ்தீன்” இயக்கம் இந்த செய்தியாளர் சந்திப்பை நேற்று மே 26 செவ்வாய்க்கிழமை கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் ஏற்பாடு செய்திருந்தது.

காசா மக்களுக்கு அவசர மனிதாபிமான உதவிகளையும் மருத்துவப் பொருட்களையும் கொண்டு சேர்க்கும் சர்வதேச முயற்சியில் சமீரா இணைந்திருந்தார்.

No comments: