News Just In

5/27/2026 09:34:00 AM

இராணுவம் பயன்படுத்தும் தனியார் காணிகளை விடுவிக்கும் துரித நடவடிக்ைக ஆரம்பம்

இராணுவம் பயன்படுத்தும் தனியார் காணிகளை விடுவிக்கும் துரித நடவடிக்ைக ஆரம்பம்
பிரதி பாதுகாப்பு அமைச்சர் யாழ். வலி வடக்கில் ஆராய்வு




யாழ்ப்பாணம், வலிக்காமம் வடக்கு பகுதியில் கடந்த 36 வருடங்களுக்கு மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர தலைமையிலான விசேட குழுவினர் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தனர்.

குறித்த குழுவினருடன், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்களும் இணைந்து இராணுவ கட்டுப்பாட்டில் மக்களின் காணிகளை நேரில் பார்வையிட்டனர்.


“மக்களின் காணிகள் மக்களுக்கே “என்ற ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைய காணிகளை விடுவிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு கட்டமாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையிலான குழுவினர் , பலாலி பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டில் , உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தனியார் காணிகளுக்குள் சென்று காணி விடுவிப்பு தொடர்பிலான சாத்தியங்கள் குறித்து நேரில் ஆராய்ந்தனர்.

அதனை தொடர்ந்து பலாலி இராணுவ வைத்தியசாலை வளாகத்தில் குறித்த குழுவினர் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.

இதன்போது, யாழ்ப்பாணம் பலாலி கிழக்கு பகுதியில் கடந்த 36 வருடங்களுக்கு மேலாக உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தனியார் காணிகளை முதல் கட்டமாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட செயலாளர் ம.பிரதீபன், பாதுகாப்பு பிரதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ் . மாவட்டத்தில் உயர் பாதுகாப்பு வலயத்தின் காணிகளில் இதுவரை 21,280 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று பலாலி கிழக்கு பகுதியில் உள்ள காணிகளையும் விடுவிக்க வேண்டும் என மாவட்ட செயலாளர் விடுத்த கோரிக்கையை அடுத்து பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் இவ் விடயம் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 1986 ஆம் ஆண்டு பலாலி விமான நிலையத்திற்கான காணி விஸ்திரிக்கப்பட்ட போது அக் காணிக்கான நட்டஈடு இதுவரை வழங்கப்படவில்லை எனவும் மாவட்ட செயலர் பிரதி அமைச்சரிடம் தெரியப்படுத்திய போது, விரைவில் கொழும்பில் தனியான கலந்துரையாடலில் இது தொடர்பாக ஆராய்வதாக பிரதி அமைச்சரால் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் பலாலி உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள வழிபாட்டுத்தலங்களில் வழிபடுவதற்கான நடவடிக்கைகளையும், வேலுப்பிள்ளை வித்தியாலயத்தின் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அமைச்சரிடம் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

பாதுகாப்பு பிரதி அமைச்சருடன், கடற்றொழில் நீரியல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, யாழ்ப்பாணம் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பி.கே. நவரத்ன ஆகியோரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்

No comments: