News Just In

5/26/2026 10:11:00 AM

ஈரான் – அமெரிக்க உடன்படிக்கையில் கடைசி நேர முரண்பாடுகள் நீடிப்பு 'அவசரம் இல்லை' என்கிறார் டிரம்ப்!


ஈரான் – அமெரிக்க உடன்படிக்கையில் கடைசி நேர முரண்பாடுகள் நீடிப்பு
'அவசரம் இல்லை' என்கிறார் டிரம்ப்: எண்ணெய் விலையில் வீழ்ச்சி




ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர் முடிவுக்கு வரும் எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையில் வீழ்ச்சி கண்டபோதும் இன்னும் இறுதி உடன்படிக்கை ஒன்று உறுதி செய்யப்படவில்லை.

இரு தரப்புக்கும் இடையிலான முரண்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் நிலையில் மத்தியஸ்த நாடான பாகிஸ்தான் ஊடாக தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. எனினும் எதிர்பார்க்கப்படும் புரிந்துணர்வு உடன்படிக்கையின் பல விடயங்கள் தொடர்பில் இரு தரப்புக்கும் இடையில் முரண்பாடு இருந்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் ஈரானுடனான உடன்படிக்கைக்கு பெரும்பாலும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு விட்டதாகவும் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். எனினும் உடன்படிக்கை ஒன்றுக்கு தமது பேச்சுவார்த்தைக் குழு அவசரம் காட்டாது என்று டிரம்ப் பின்னர் அறிவித்தார்.

இந்நிலையில் நேற்று (25) எண்ணெய் விலை கடந்த இரண்டு வாரங்கள் இல்லாத அளவுக்கு சரிவைக் கண்டது. சர்வதேச எண்ணெய் விலைகளுக்கான பிரதான குறியீடாக உள்ள பிரெண்ட் ரக மசகு எண்ணெய் 5 வீதம் சரிவு கண்டு பீப்பாய் ஒன்று 97.94 டொலர்களாக வீழ்ச்சி கண்டது. இது ஒரு மாதத்திற்கு முன்னர் இருந்ததை விடவும் 9 வீத வீழ்ச்சி என்றபோதும் போர் ஆரம்பிப்பதற்கு முன்னர் இருந்த நிலைமையுடன் ஒப்பிடுகையில் தொடர்ந்து மூன்றில் ஒரு பங்கு அதிகரிப்பாகவே உள்ளது.

கடந்த ஞாயிறன்று டிரம்ப் வெளியிட்ட சமூக ஊடக பதிவில் ஈரானுடனான பேச்சுவார்த்தை முறையாகவும் ஆக்கபூர்வமாகவும் இடம்பெற்று வருவதாக குறிப்பிட்டிருந்தார். எனினும் ‘உடன்பாடு ஒன்றை எட்டுவதில் அவசரம் காட்ட வேண்டாம்’ என்று அதிகாரிகளை அறிவறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார். ‘இரு தரப்பினரும் அவசரப்படாமல், நிதானமாகச் செயல்பட்டு அதைச் சரியாகச் செய்ய வேண்டும். தவறுகளுக்கு இடமில்லை’ என்று அவர் ட்ரூத் சோசியல் சமூக ஊடகத்தில் எழுதியுள்ளார். இந்நிலையில் ஈரான் உடன் அமெரிக்கா சிறந்த உடன்படிக்கை ஒன்றுக்கு வரும் அல்லது அந்த நாட்டை வேறு வகையில் கையாளும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ருபியோ நேற்று (25) குறிப்பிட்டிருந்தார். மூன்று மாதங்கள் நீடிக்கும் இந்தப் போரில் உடன்படிக்கை ஒன்றை எட்டுவது தொடர்பில் அமெரிக்கா தற்போது குறைத்து மதிப்பிடும் வகையிலான கருத்துகளை வெளியிட்டு வருகிறது

இந்தியா பயணமாகி இருக்கும் ருபியோ புது டெல்லியில் செய்தியாளர்களிடம் நேற்று பேசும்போது, ‘அமெரிக்கா, மாற்று வழிகளை ஆராய்வதற்கு முன், இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் வழங்கும்’ என்றார்.

‘(ஹோர்முஸ்) நீரிணையை திறந்து வைத்து, அதன் வழியாகச் செல்லும் திறனை உறுதி செய்வது, அணு விவகாரம் குறித்து உண்மையான, முக்கியமான மற்றும் காலக்கெடு கொண்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது போன்ற விடயங்களில் மிகவும் உறுதியான முன்மொழிவு இடம்பெற்றுள்ளது.

நம்பிக்கையுடன் சொல்கிறேன், இதை நாம் வெல்ல முடியும்’ என்று ருபியோ குறிப்பிட்டுள்ளார். ஈரான் அரசு தரப்பில் இருந்து இது தொடர்பில் உடன் எந்த பதிலும் வெளியிடப்படவில்லை. எனினும் ஈரான் புரட்சிக் காவல் படையுடன் தொடர்புபட்ட தஸ்னிம் செய்தி நிறுவனம், உடன்படிக்கை ஒன்றை எட்டுவதில் அமெரிக்கா தொடர்ந்து இடையூறாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இதில் முடக்கப்பட்ட சொத்துகளை விடுவிக்கும் ஈரானின் கோரிக்கையும் அடங்குவதாக தெரிவித்துள்ளது.

No comments: