முன்னாள் எம்.பி. எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக பங்கேற்பு
நூருல் ஹுதா உமர்
நற்பிட்டிமுனை ஐ.ஆர்.எம் (IRM) பவுண்டேஷன் பெருமையுடன் ஏற்பாடு செய்திருந்த “போதையற்ற இளைஞர் சமூகத்தை நோக்கி” எனும் தொனிப்பொருளை மையமாகக் கொண்ட சினேகபூர்வ உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி நேற்று (26) செவ்வாய்க்கிழமை நற்பிட்டிமுனை அஸ்ரப் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் விமரிசையாக நடைபெற்றது.
ஐ.ஆர்.எம் பவுண்டேஷன் தலைவர் ஏ.ஆர். இம்தியாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த இறுதி நிகழ்வில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.
ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், நற்பிட்டிமுனை ரிபிள் ஐ விளையாட்டுக் கழகம் மற்றும் நற்பிட்டிமுனை என்.எப்.சி (NFC) விளையாட்டுக் கழகம் நேருக்கு நேர் மோதின.
ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் சமநிலையைப் பெற்றதைத் தொடர்ந்து, வெற்றியாளரைத் தீர்மானிக்க நடைபெற்ற தண்டனை உதை (Penalty Shootout) சுற்றில் அபாரமான திறமையை வெளிப்படுத்திய ‘ரிபிள் ஐ’ அணி வெற்றி பெற்று, இச்சுற்றுப்போட்டியின் சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது. விழாவின் இறுதியில் வெற்றியாளர் அணிக்கு கிண்ணமும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டதுடன், பங்கேற்ற அணிகளுக்கும் ஏற்பாட்டாளர்களுக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.
நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக நற்பிட்டிமுனை கிராமத்தின் ஆரம்பகால உதைப்பந்தாட்ட வீரர்களும், போட்டி அனுசரணையாளர்களும் கலந்துகொண்டனர். இதன்போது, கிராமத்தின் உதைப்பந்தாட்ட வளர்ச்சிக்கு ஆரம்பகாலம் முதல் பெரும் பங்களிப்பை வழங்கிய மூத்த வீரர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
No comments: