கல்வி, உயர் கல்வி அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் பிரதம மந்திரியும், கல்வி, உயர் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற போது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தனது முன்மொழிவில் இலங்கையில் அமைந்துள்ள 06 தமிழ் மொழி மூல தேசிய கல்வியியற் கல்லூரிகளில் அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரி சிறப்பாக செயற்பட்டு வருகின்றது.
அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியில் 1992ம் ஆண்டிலிருந்து 20 வருடங்கள் உடற்கல்வி பாடநெறி சிறப்பாக கற்பிக்கப்பட்டு நாட்டுக்குத் தேவையான சிறந்த உடற்கல்வி ஆசிரியர்களை உருவாக்கி வந்தது. 2013ம் ஆண்டில் சிலரது தனிப்பட்ட நலனுக்காக இக்கற்கை நெறி இடைநிறுத்தப்பட்டன. எனவே, அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியில் உடற்கல்வி கற்கை நெறிக்கு போதுமான இடவசதிகள், வசதியான விளையாட்டு மைதானங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் உள்ளதுடன் அண்மையில் இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட 02 உடற்கல்வி விரிவுரையாளர்கள் இக்கல்லூரிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எனவே, இடைநிறுத்தப்பட்ட உடற்கல்வி பாடநெறியினை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை கௌரவ பிரதம மந்திரி அவர்கள் மேற்கொள்ள வேண்டும் என அம்பாறை மாவட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக விளக்கங்களைப் பெற்றுக் கொண்ட கௌரவ பிரதம மந்திரி அவர்கள் அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியில் இடைநிறுத்தப்பட்ட உடற்கல்வி கற்கை நெறியினை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர். நாலக்க கலுவெவ அவர்களுக்கு பணிப்புரை வழங்கினார்.
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் போட்டிப் பரீட்சைக்கு தோற்றி 172 புள்ளிகளுக்கு குறைவாகப் புள்ளிகளைப் பெற்ற தகுதியான 1216 ஆசிரியர்கள் மீதமாக உள்ளனர். இவ் ஆசிரியர்களில் 50 வயதினை பூர்த்தி செய்தவர்களும் உள்ளனர். சென்ற 26.11.2025 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கௌரவ பிரதம மந்திரி அவர்களை சந்தித்த அதிபர் பரீட்சை எழுதிய ஆசிரியர்களுக்கு இதுவரை அதிபர் நியமனம் வழங்கப்படாமல் உள்ளது. பரீட்சை எழுதியவர்களில் பலர் 50 வயதினை தாண்டியுள்ளனர். எனவே, இவர்களின் விடயமாக கல்வி அமைச்சின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்குமாறு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார்.
அதிபர் நியமனம் தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர். நாலக்க கலுவெவ அவர்களை பதிலளிக்குமாறு பிரதம மந்திரி பணித்தார்.
இது தொடர்பாக பதிலளித்த கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர். நாலக்க கலுவெவ அதிபர்களால் கல்வி அமைச்சுக்கு எதிராக பல வழக்குகள் தொடரப்பட்டு தற்போது அந்த வழக்குகள் எல்லாம் முடிவுக்கு வந்துள்ளன. எனவே, அதிபர்களுக்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைபவர்களுக்கு அதிபர் நியமனம் வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
No comments: