News Just In

5/08/2026 11:23:00 AM

மக்களின் நிலம், வளம், வாழ்வுரிமை பாதுகாக்கப்பட வேண்டும்; உடனடி தீர்வு அவசியம்!”- ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் கலீலுர் ரஹ்மான்

மக்களின் நிலம், வளம், வாழ்வுரிமை பாதுகாக்கப்பட வேண்டும்; உடனடி தீர்வு அவசியம்!”- ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் கலீலுர் ரஹ்மான்



நூருல் ஹுதா உமர்

நாட்டின் பல பகுதிகளில் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சாதாரண மக்களின் அடிப்படை வாழ்வுரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுகின்றமை மிகுந்த கவலையளிக்கிறது. திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கறுமலையூற்று கடற்கரைக்கு பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் செல்ல விமானப்படையினரால் திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளமை மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்தக் கடற்பரப்பை நம்பியே வாழ்ந்து வரும் நூற்றுக்கணக்கான மீனவக் குடும்பங்கள் தமது அன்றாட வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயத்தில் தள்ளப்பட்டுள்ளனர் என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும், கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான ஐ.ஏ.கலீலுர் ரஹ்மான் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும், முப்பது வருட யுத்த காலத்திலும் விதிக்கப்படாத கட்டுப்பாடுகள் இன்று மக்கள்மீது திணிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். தற்போதைய ஜனாதிபதி மக்கள் மையப்படுத்தப்பட்ட அரசியல் கலாசாரத்தையும் ஜனநாயக சூழலையும் உருவாக்க முயற்சிக்கும் இந்நேரத்தில், பாதுகாப்பு தரப்பினரின் தன்னிச்சையான நடவடிக்கைகள் அரசாங்கத்தின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

மேலும் “விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து கம்பெனிகளுக்கு வழங்கப்பட்ட முத்து நகர் விளைநிலங்களை உடனடியாகத் திருப்பிக் கொடு”, “பொய்கள் வேண்டாம்”, “விவசாயிகளை இப்படியா நடத்துவது?” போன்ற வாசகங்களை ஏந்தியவாறு முத்து நகர் விவசாயிகள் மற்றும் மக்கள் போராட்ட இயக்கம், அகில இலங்கை விவசாய சம்மேளன பிரதிநிதிகள் இணைந்து முன்னெடுத்து வரும் சத்தியக்கிரகப் போராட்டம் மக்களின் வேதனையின் வெளிப்பாடாகும்.

விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் மக்களின் காணிகளை அபகரித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் எந்த அபிவிருத்தித் திட்டமும் உண்மையான அபிவிருத்தியாக கருதப்பட முடியாது. கடந்த அரசாங்கம் போலவே தற்போதைய அரசாங்கமும் மக்களின் பிரச்சினைகளை புறக்கணிக்கும் போக்கை கடைப்பிடிப்பதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஜனாதிபதி செயலகம் வரை போராடிய விவசாயிகளுக்கு இதுவரை நிலையான தீர்வு வழங்கப்படாதமை மிகவும் வருத்தத்திற்குரியது.

எனவே, ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கறுமலையூற்று கடற்கரையில் விதிக்கப்பட்டுள்ள தடைகள் உடனடியாக நீக்கப்பட்டு, மீனவர்கள் தமது தொழிலை சுதந்திரமாக முன்னெடுக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், முத்து நகர் விவசாயிகளின் காணி பிரச்சினைக்கு உடனடி நீதியான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும், மக்களின் விவசாய நிலங்கள் மற்றும் இயற்கை வளங்கள் அவர்களது சம்மதமின்றி தனியார் அல்லது வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படக்கூடாது என்றும் கோரிக்கைகளை முன்வைத்து அரசை வலியுறுத்துகிறது.

மக்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, ஜனநாயக ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதிலும் மக்களின் நிலம், வளம், வாழ்வுரிமை மற்றும் தொழிலுரிமை மீறப்படும் போதெல்லாம் எமது குரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments: