News Just In

5/08/2026 04:21:00 PM

கபில சந்திரசேன மர்ம மரணம்! பிணையாளர்களாக முன்னிலையானவர்கள் அம்பலப்படுத்திய தகவல்கள்

கபில சந்திரசேன மர்ம மரணம்! பிணையாளர்களாக முன்னிலையானவர்கள் அம்பலப்படுத்திய தகவல்கள்


ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கபில சந்திரசேனவின் பிணையாளர்களாக முன்னிலையான இருவர், பணத்துக்காக பொய் சாட்சி வழங்கியமை அம்பலமானதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்துக்காக 'எயார்பஸ்' விமானங்களைக் கொள்வனவு செய்தபோது, 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்று கபில சந்திரசேன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அவருக்கு 100 மில்லியன் ரூபா பெறுமதியான சரீரப் பிணைகளை நீதிமன்றம் விதித்திருந்தது.

கபில சந்திரசேனவுக்கு பிணை வழங்குவதற்காக சாஞ்சி ஆராச்சிவத்தையைச் சேர்ந்த முகமது ரிஸ்வான் மற்றும் முகமது இர்ஷான் ஆகிய இருவரும் பிணையாளர்களாக நீதிமன்றில் முன்னிலையாகினர்.

எனினும், இவர்களுக்கும் கபில சந்திரசேனவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரணையின் போது அவர்கள் ஒப்புக்கொண்ட அதிர்ச்சித் தகவல்கள் வருமாறு,

தமக்கு கபில சந்திரசேன யார் என்றே தெரியாது. தலா 15 ஆயிரம் ரூபா பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவே பிணை நின்றதாக ஒப்புதல்.

'தேவா' மற்றும் 'திஸ்ஸ' என்பவர்களின் தூண்டுதலின் பேரிலேயே நீதிமன்றத்துக்கு வந்ததாக வாக்குமூலம். தமக்கு நிலையான வருமானமோ அல்லது தொழிலோ இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிணைச் சட்டத்தின்படி, சந்தேகநபரை நன்கு அறிந்தவர் மட்டுமே பிணையாளராக இருக்க முடியும். இந்த விதியை மீறியதுடன், கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் வாழைத்தோட்டம் பொலிஸார் இவர்களைக் கைது செய்தனர்.

நேற்றுமுன்தினம் கொழும்பு மேலதிக நீதிவான் லஹிரு சில்வா முன்னிலையில் இவர்கள் முன்னிலைபடுத்தப்பட்டனர்.

இதன்போது, சந்தேகநபர்களின் பின்னணி மற்றும் கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்கள் பெறப்பட்ட விதம் குறித்து முழுமையான அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்ட நீதிவான், இருவரையும் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

மில்லியன் கணக்கிலான ஊழல் வழக்கில், கூலிக்கு பிணை நின்ற சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக விசாரணை இடம்பெற்று வரும் நிலையில், அவர் இன்று காலை உயிரிழந்துள்ளமை பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

No comments: