நாட்டில் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், ஏப்ரல் மாதம் முழுவதும் வெப்பமான காலநிலையே தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்துத் தெரிவித்த வானிலை அதிகாரி பபோதினி கருணாபால, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாதகமான வளிமண்டல சூழல் நிலவுவதாகக் குறிப்பிட்டார். கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சியாக அனுராதபுரம் - ரம்பேவ பகுதியில் 86.5 மில்லிமீற்றரும், மொனராகலை - அழுத்வெவ பகுதியில் 74 மில்லிமீற்றரும் பதிவாகியுள்ளது.
மழை பெய்த போதிலும் கடும் வெப்பம் குறையாது என்பதால், வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தற்காத்துக்கொள்ள சுகாதார ஆலோசனைகளை முறையாகப் பின்பற்றுமாறு அவர் பொதுமக்களை வலியுறுத்தினார்.
இதேவேளை, மேல், சப்ரகமுவ, தெற்கு, கிழக்கு, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் சில இடங்களில் வெப்பம் ‘எச்சரிக்கை மட்டம்’ வரை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
அதேநேரம், மகாவலி அதிகார சபையின் தரவுகளின்படி, நாட்டின் முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் கவலைக்கிடமாக உள்ளது. இதன்படி, பொல்கொல்ல (93%), ரந்தெனிகல (88%), போவத்தன்ன (80%) ஆகிய நீர்த்தேக்கங்கள் ஓரளவு அதிக நீர்மட்டத்தைக் கொண்டுள்ள போதிலும், காஸல்ரீ (27%) மற்றும் கொத்மலை (24%) ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் பெருமளவு குறைவடைந்துள்ளது. ஏனைய நீர்த்தேக்கங்களான சமனலவெவ 59%, விக்டோரியா 60%, மேல் கொத்மலை 60% மற்றும் ரன்தம்பே 58% எனும் அளவிலேயே நீர் சேமிப்பைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: