News Just In

4/04/2026 11:43:00 AM

தென்னிலங்கையில் மாணவர்களுக்கு இடையில் கடும் மோதல் - ஒருவர் மரணம்

தென்னிலங்கையில் மாணவர்களுக்கு இடையில் கடும் மோதல் - ஒருவர் மரணம்



லுனுகம்வெஹெர - மத்தல பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியின் போது இடம்பெற்ற மோதலில் காயமடைந்த 15 வயதுடைய மாணவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி பாடசாலை விளையாட்டுப் போட்டியின் இடைவேளையின் போது, 11ஆம் தரத்தில் கல்வி பயிலும் 15 வயதுடைய மாணவனுக்கும், 10ஆம் தரத்தில் பயிலும் 14 வயதுடைய மாணவனுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இது பின்னர் கைகலப்பாக மாறிய நிலையில், அங்கிருந்த ஆசிரியர்கள் தலையிட்டு மோதலை கட்டுப்படுத்தியுள்ளனர்.

பாடசாலை முடிந்து வீடு திரும்பிய 15 வயதுடைய மாணவன், திடீரென வாந்தி எடுத்ததோடு உடல்நலக் குறைபாட்டிற்கு உள்ளாகியுள்ளார்.

இதன்போது பெற்றோர் வினவியபோது, தான் பாடசாலையில் தவறி விழுந்ததாக மாணவன் கூறியுள்ளார். உடனடியாக அவர் லுனுகம்வெஹெர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலைக்கும், பின்னர் அங்கிருந்து காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் மாணவனின் மூளையினுள் இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.
மாணவன் கைது

அவருக்கு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோதலில் ஈடுபட்ட மற்றைய மாணவன் லுனுகம்வெஹெர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறிய பின்னர், மத்தல பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, 5 லட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

தற்போது மாணவன் உயிரிழந்துள்ள நிலையில், மத்தல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

No comments: