.jpg)
இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலிய நாடக ஆசிரியர் எஸ். சக்திதரன் (சக்தி), சர்வதேச அளவில் புகழ்பெற்ற Windham-Campbell விருதினை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இலங்கைத் தமிழர்களின் புலம்பெயர் வாழ்வியலை மையமாக வைத்து இவர் எழுதிய Counting and Cracking என்ற நாடகம் உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
நாடகத் துறையில் இவரது சிறந்த பங்களிப்பிற்காக 1,75,000 அமெரிக்க டொலர் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
1983 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த இனக்கலவரத்தால் தனது குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவிற்குப் புலம்பெயர்ந்து தற்போது அங்கு வசித்து வருகிறார்.
தனது வெற்றி குறித்துப் பேசிய சக்திதரன் , "எங்கள் கதைகள் உலக அரங்கில் அங்கீகரிக்கப்படுவது பெருமையாக உள்ளது" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கையில் The Laugh of Lakshmi என்ற தனது முதல் திரைப்படத்தைப் படமாக்கி வருகிறார்.
ஆஸ்திரேலிய நாடகத் துறையில் ஆசிய மக்களின் கதைகளை ஆழமாகப் பதிவு செய்யும் அவரது எழுத்துக்கள், நவீன ஆஸ்திரேலியா குறித்த புதிய பார்வையை உலகிற்கு வழங்குகின்றன. இவரது நாடகங்கள் ஏற்கனவே விக்டோரியன் இலக்கிய விருது உட்பட பல முக்கிய விருதுகளைப் பெற்றுள்ளன.
இவரது மற்றொரு படைப்பான The Jungle and the Sea, இலங்கை உள்நாட்டுப் போரின் வலிகளைப் பதிவு செய்தது. இவரது அண்மைக்கால படைப்பான The Wrong Gods மற்றும் சுயசரிதை புத்தகமும் வாசகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்த விருது ஒரு எழுத்தாளரின் ஒட்டுமொத்தப் படைப்புகளையும் ஆய்வு செய்து, ரகசியமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே வழங்கப்படுகிறது. இந்த அங்கீகாரம் தனது கலைப் பயணத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல பெரும் உதவியாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்
No comments: