
2026 டி20 உலகக் கோப்பையை வென்றதையடுத்து முன்னாள் இங்கிலாந்து தொடக்க வீரர் மார்க் புட்ச்சர் இந்தியாவை பாராட்டியதோடு, பாகிஸ்தான் அணியின் பிரச்சினை தனிப்பட்ட வீரர்களின் சாதனைகள்தான் பெரிதாகப் பேசப்படுவதாக விமர்சித்துள்ளார்.
கம்பீரும் கோப்பைகளைப் பேசுங்கள், தனிமனித மைல்கற்களைப் பேச வேண்டாம் என்று அறிவுரை என்ற முகமூடியில் தடை உத்தரவு போட்டார். இந்நிலையில் மார்க் புட்சர் பாகிஸ்தான் அணி தனிவீரரின் சாதனைகளையே பேசுகிறது, விதந்தோதுகிறது, மாறாக இந்திய அணியில் தனிவீரர்களை விட அணியின் கூட்டுச் செயல்பாடுகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக பாராட்டியுள்ளார்.
விஸ்டனுக்கு அளித்த பேட்டியில் மார்க் புட்ச்சர் கூறும்போது, “பாகிஸ்தான் அணியில் தனிப்பட்ட வீரர்களின் மைல்கற்களும் தனிநபர் சூப்பர் ஸ்டார்களுமே பேசப்படுகின்றனர், மாறாக கடும் விமர்சகர்களை எதிர்கொண்டு வரும் கம்பீர் சூப்பர் ஸ்டார் கலாச்ச்சாரத்தையும் தனிப்பட்ட வீரர்களின் மைல்கல் என்னும் தனிமனிதவாதத்திலிருந்து விலகி நடந்து அணியைக் கட்டமைத்துள்ளார்.” என்று கம்பீரை தூக்கி வைத்துப் பேசியுள்ளார்.
பாகிஸ்தானின் ஷகிப்ஜதா ஃபர்ஹான் இந்த உலகக்கோப்பையின் அதிக ரன்கள் எடுத்த வீரர். ஆனால் அணி அரையிறுதிக்குக் கூட தகுதி பெறவில்லை. இதனையடுத்து மார்க் புட்ச்சர் போலவே பாகிஸ்தான் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸனும் எதிரொலித்தார். இவர் வந்த பிறகே பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷாஹின் ஷா அஃப்ரீடி ஆகியோரை உட்கார வைத்து அதிர்ச்சி மருத்துவம் அளித்தார்.
மைக் ஹெசன் ஏற்கெனவே இது பற்றிக் கூறியதும் மார்க் புட்ச்சர் கூறியதைப் போன்றதுதான். “பல காலங்களாக இதுதான் நடந்து கொண்டிருக்கிறது, சொந்த சாதனைகளே முக்கியம் என்று வீரர்கள் ஆடுகின்றனர். ஓவருக்கு 14 ரன்கள் தேவையாக இருக்கும் போது, தங்கள் சொந்த சாதனைகளை பூர்த்தி செய்ய சிங்கிள் எடுப்பது சுயநலமாகும்.
ஆனால் 14 ரன்களை நோக்கி அவுட் ஆனாலும் பரவாயில்லை என்று ஷாட்களைத்தான் ஆட வேண்டும். அணி 14 ரன்களில் தோல்வி அடையும் போது அணியின் வீரர் ஒருவர் ஏதோ சாதனை புரிந்தார் என்று பேசுவதில் அர்த்தமில்லை. என்ன செய்தாலும் அணி வெற்றி பெறவே ஆட வேண்டும்.” என்று மைக் ஹெசன் ஏற்கெனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments: