கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் அக்கரைப்பற்று வைத்தியசாலைக்கு திடீர் விஜயம்
நூருல் ஹுதா உமர்
கல்முனை பிராந்தியத்தில் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களின் சேவைகளை மேம்படுத்தி, பொதுமக்களுக்கு தரமான சுகாதார சேவைகளை வழங்கும் நோக்கில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திடீர் கள விஜயங்களை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் அவர்கள் கடந்த சனிக்கிழமை அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டார்.
இவ்விழாவின் போது, வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம். சனூஸ் உள்ளிட்ட வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களைச் சந்தித்த பணிப்பாளர், வைத்தியசாலையின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் சேவை வழங்கல் நிலைமைகள் குறித்து விரிவாக கலந்துரையாடினார்.
தொடர்ந்து, வைத்தியசாலையின் விடுதிகள் மற்றும் பல்வேறு பிரிவுகளுக்கு நேரில் சென்று பார்வையிட்ட அவர், அத்தியாவசிய வசதிகள், மருந்து தேவைகள் மற்றும் உட்கட்டமைப்பு குறைபாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், அங்கு பணியாற்றும் மருத்துவ மற்றும் நிர்வாக பணியாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றியும் கேட்டறிந்து, சேவைகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுக்க தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார்.
இதனுடன், வைத்தியசாலை தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் அவசரத் தேவையானவற்றை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிராந்திய பணிப்பாளர் உறுதியளித்தார். இந்த கள விஜயத்தின் போது, கல்முனை பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டுப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம். மாஹிர் அவர்களும் கலந்து கொண்டார்.
No comments: