கடந்த 4 தசாப்தங்களாக பல்வேறு அரசாங்கங்களில் பல்வேறு அமைச்சுக்களின் அமைச்சரவை அமைச்சராக முஸ்லிங்கள் இருந்தும் கடந்த காலங்களில் நீதி அமைச்சராக ரவூப் ஹக்கீம், அலி சப்ரி போன்ற மூத்த சட்டத்தரணிகள் இருந்தும் சமூகம் அடையாத நன்மையை குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணிகள் சாதித்து முஸ்லிம் சமூகத்தின் குரலாக எழுந்து நீதியின் கதவை தட்டியுள்ளமை பாராட்டப்பட வேண்டியது என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும், கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், 1990 காலப்பகுதியில் கிழக்கில் குருக்கள்மடம் பகுதிகளில் விடுதலை புலிகள் அமைப்பினால் ஹாஜிகள் கொல்லப்பட்டதாக கூறப்படும் படுகொலை சம்பவங்கள் தொடர்பாக மீண்டும் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு தாமெதித்தேனும் நீதி கிடைக்குமா என்ற கேள்வி சமூகத்தில் இப்போது எழுந்துள்ளது.
அந்த காலகட்டத்தில் பொதுமக்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாக தற்போது நீதிமன்றத்தின் விசாரணை இடம்பெற்று அந்த விசாரணையின் ஒரு பகுதியாக, சம்பவங்களுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் புதைகுழிகள் தோண்டி எடுக்கப்படும் பணிகள் இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இச்சம்பவங்களுக்கு பொறுப்பானவர்களை அடையாளம் கண்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுமா என்பது தொடர்பில் இன்னும் தெளிவில்லை.
இந்நிலையில், கடந்த காலத்தில் விடுதலை புலிகள் இயக்கங்களுடன் தொடர்பு கொண்டிருந்த முக்கிய நபர்களான கருணா அம்மான், பிள்ளையான் போன்றோர்கள் தற்போதைய அரசியலில் ஈடுபாட்டுடன் உள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதேவேளை, COVID-19 காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டாய தகனம் தொடர்பாகவும் முஸ்லிம் சமூகத்தில் நீதி கோரும் குரல்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. அந்த காலகட்டத்தில் கட்டாயமாக தகனம் செய்யப்பட்ட ஜனாஸாக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை இன்னும் தீர்வு காணப்படாத நிலையில் உள்ளது.
முன்னாள் அரசாங்க காலத்தில், இந்த விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு எங்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் இதுகுறித்து யோசனை முன்வைத்திருந்தாலும், அதன் பின்னர் தொடர்ச்சியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதை இங்கு நினைவுபடுத்த வேண்டியுள்ளது.
தற்போதைய அரசாங்கம் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில், கடந்த கால படுகொலை சம்பவங்களுக்கும், கட்டாய தகன விவகாரத்திற்கும் நீதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் வலியுறுத்துகின்றனர். “சந்தேக நபர்கள் உயிருடன் இருக்கும் நிலையில், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவது அரசாங்கத்தின் கடமை. கட்டாய தகனம் என்பது ஒரு கடுமையான மனித உரிமை மீறல்; அதற்கும் நீதி கிடைக்க வேண்டும்,” என சமூகத்தின் பல்வேறு தரப்பினர் வலியுறுத்துகின்றனர்.
முஸ்லிம் சமூகத்திற்கு அமைச்சரவை பிரதிநிதித்துவம் வழங்கப்படுகிறதா இல்லையா என்பது விட, இவ்வாறான நீதி கேள்விகளுக்கு தீர்வு காணப்படுவது அவசியம். இந்நிலையில், நடந்து வரும் விசாரணைகள் எவ்வாறு முன்னேறுகின்றன, மற்றும் அரசாங்கம் தனது வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்றுகிறது என்பது குறித்து நாடு முழுவதும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்
No comments: