
விஜய்க்கு அனுமதி மறுத்துவிட்டு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மட்டும் ஒருதலைபட்சமாக திறந்தவெளி வாகன பிரச்சாரத்திற்கு அனுமதி அளித்திருப்பது ஜனநாயகத்தை கேலிகூத்தாக்கும் செயலாகும் என தவெக கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில், “பிரச்சாரத்திற்கு முறையாக அனுமதி பெற்றும் ஒரு பிரச்சார இடத்தில் இருந்து இன்னொரு பிரச்சார இடத்திற்கு நான் செல்லும் வழியில், காவல்துறை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முறைபடுத்துதல் கொஞ்சம்கூட இல்லாததால் எனது பிரச்சார வாகனம் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல இயலாத பாதுகாப்பற்ற சூழல் உருவாக்கப்படுகிறதா? என்கிற ஐயம் ஏற்படுகிறது.
சென்னை மாநகர காவல்துறையின் இத்தகைய, ஒருதலைபட்சமான நடவடிக்கைகளின் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முறைபடுத்துதலை உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும். அவ்வாறு செயல்படாத அதிகாரிகள் மீது துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
அத்தோடு எனக்கு அனுமதி மறுத்துவிட்டு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மட்டும் ஒருதலைபட்சமாக திறந்தவெளி வாகன பிரச்சாரத்திற்கு அனுமதி அளித்திருப்பது ஜனநாயகத்தை கேலிகூத்தாக்கும் செயலாகும்.
எனது பிரச்சார செயல்பாடுகள் சார்ந்த அரசின் பொறுப்புகளை தட்டிக்கழித்து, முறையாக பிரச்சாரங்களை மேற்கொள்ளும் சூழலை முடக்க கபட நாடக திமுக அரசுக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார்.
மேலும், தவெக இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரத்திற்கு மைக் மற்றும் பாக்ஸ் ஸ்பீக்கர்களை பயன்படுத்தத் தடை விதிப்பதா? முதலமைச்சரின் தொகுதி என்றால் மற்றக் கட்சியினர் பிரச்சாரம் செய்யக் கூடாதா? திமுக தலைவர் ரோடு ஷோ நடத்தலாம், ஆனால் தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மைக்குடன் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுப்பதா?
அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்படுவதை தேர்தல் ஆணையம் ஆதரிக்கிறதா? கழகத் தலைவரின் பிரசாரத்திற்கு முறையாக அனுமதி பெற்றும், இன்று மதியம், தவெக தலைவர் அங்கு சென்றடையும் வரைக்கும், மாலை முதலமைச்சர் வருகிறார் என்று காரணம் கூறி பிரச்சார இடத்தில் இரும்பாலான தடுப்புகள் கொண்டு (Barricades) பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய அனுமதிக்கவில்லை.
தேர்தல் ஆணையத்திடம் முறையாக அனுமதி பெற்று நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தால், முதலமைச்சர் வருகிறார் என்று கூறி பிரச்சாரத்திற்கு தடை விதிப்பது கண்டனத்திற்குரியது. திமுகவின் கைப்பாவையாக அதிகாரிகள் செயல்படுகிறார்கள். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது, அதிகாரிகள் பாரபட்சமாக நடந்துகொள்வது ஏன்? ஒருதலைபட்சமாக செயல்படும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முறையாக அனுமதி பெற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் கொளத்தூர் தொகுதி பிரசாரத்திற்கு, கடுமையாகப் போராடி, அதிகாரிகளிடம் பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்திப்பட்ட பிறகே மைக், ஸ்பீக்கர் பாக்ஸ் உள்ளிட்டவைகளை பயன்படுத்த அனுமதி பெறுவதுதான் முறையா? ஒருதலைபட்சமாக செயல்படும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
No comments: