பல்வேறு காரணங்களால் வைத்தியசாலைகளை நாடி மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள முடியாதவர்களுக்காக இலவச மருத்துவப் பரிசோதனை முகாம் வசதி செய்து கொடுக்கப்பட்டதாக (CIRCLE) சேர்க்கிள் இளம் பெண்கள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஜானி காசிநாதர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு - கோறளைப்பற்று வாழைச்சேனை மத்தி பிரதேச செயலகத்தில் இந்த இலவச மருத்துவப் பரிசோதனை முகாம் இடம்பெற்றது.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சேர்க்கிள் இளம் பெண்கள் அமைப்பின் நிதி அனுசரணையில் பிரதேச செயலகத்துடன் மகளிருக்கான சிறப்பு ஏற்பாடாக பிரதேச செயலாளர் எம்.பி.எம். முபாறக் தலைமையில் மகளிர் தின நிகழ்வுகளும் இலவச மருத்துவப் பரிசோதனை முகாமும் இடம்பெற்றது.
நிகழ்வைத் துவக்கி வைத்து அங்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளக் காத்திருந்த பயனாளிகளிடம் உரையாற்றிய நிகழ்வின் அனுசரணையாளரான சேர்க்கிள் இளம் பெண்கள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஜானி, “பெண்கள் தங்களது குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து சதாவும் வேலைப் பளுக்களைச் சுமந்து உழைத்துக் கொண்டிருப்பதால் தங்களது உடல் நிலையைப் பற்றியும் ஆரோக்கியத்தைப் பற்றியும் அக்கறை கொள்ளாமல் நோயாளிகளாகி விடுகின்றனர். கடைசியில் இது அவர்களையும் குடும்பங்;களையும் மனித சமுதாயத்தையும் பாதிப்படையச் செய்கிறது.
எனவே, அதிலிருந்து சற்று விலகி, நின்று, நிதானித்து பெண்கள் தங்களது உடலாரோக்கியத்தையும் பேண வேண்டும் என்பதற்காக இந்த இலவச மருத்துவப் பரிசோதனை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை குறிப்பாகப் பெண்கள் பயன்படுத்திக் கொண்டு பயனடைய வேண்டும்.” என்றார்.
பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரீ.எம். நஜீப்கான் தலைமையிலான மருத்துவக் குழுவினர் இந்த மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தனர்.
இந்த இலவச மருத்துவ முகாம் முயற்சியின் பயனாக பிரதேச செயலகத்தில் பணிபுரியும் அலுவலர்களும் பொதுமக்களுமாக சுமார் 50 இற்கு மேற்பட்டோர் உடற் பரிசோதனைகளை மேற்கொண்டு தங்களது உடலாரோக்கிய நிலைமைகளை அறிந்து கொண்டதாக மருத்துவ முகாம் குழுவினர் தெரிவித்தனர்.
இதில் பரிசோதனை மேற்கொண்டு தங்களது உடல் நிலையைப் பற்றி அறிந்து கொண்ட அலுவலகப் பெண்கள் இது தங்களது உடல் நிலையைப் பரிசோதிக்க தங்களுக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு என்று தெரிவித்தனர்.
மகளிர் தினத்தையொட்டிய மருத்துவ முகாம் நிகழ்வில் மாதவிடாய் சுகாதாரப் பொருட்களின் கண்காட்சியும் இடம்பெற்றது.
இதனோடு கூடவே சேர்க்கிள் இளம் பெண்கள் அமைப்பின் நிதி அனுசரணையில் “பெண்களின் தலைமைத்துவம், செழிப்பான தேசத்தின் பெருமை" என்ற தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வுகளில் திம்புலாகல பிரதேச செயலாளர் எம்.எம். கைருன்னிஸா, வாழைச்சேனை மத்தி பிரதேச உதவிச் செயலாளர் ஏ.ஜுமானா ஹஸீன் உட்பட இன்னும் பல அதிகாரிகளும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும், மகளிர் சங்க அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
No comments: