News Just In

2/13/2026 06:52:00 AM

சிசு செரிய திட்டத்தில் கவனம் செலுத்தும் அரசு - கொழும்புக்கு வரும் புதிய பேருந்துகள்

சிசு செரிய திட்டத்தில் கவனம் செலுத்தும் அரசு - கொழும்புக்கு வரும் புதிய பேருந்துகள்




பொதுமக்களுக்குக் கௌரவமான மற்றும் நம்பகமான சேவையை வழங்குவதற்காக முழுப் போக்குவரத்து கட்டமைப்பிலும் விரைவான மாற்றம் ஏற்பட வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

நாட்டின் போக்குவரத்துக் கட்டமைப்பை மிகவும் வினைத்திறன் மிக்க, பாதுகாப்பான மற்றும் நவீன தொழில்நுட்பத்துடனான போக்குவரத்துச் சேவையாக மாற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுடன் இன்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

போக்குவரத்துத் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக பொருளாதாரப் போட்டித்தன்மை, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, டிஜிட்டல் மாற்றம், சமூக சமத்துவம் மற்றும் பிரவேசம் மற்றும் பாதுகாப்பு ஆகிய 05 தூண்களின் கீழ் போக்குவரத்து அமைச்சினால் திட்டமிடப்பட்டுள்ள மூலோபாயத் திட்டம் குறித்து இதன்போது ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

சிசு செரிய திட்டத்தை மேலும் திறம்படச் செய்வது மற்றும் மாணவர்களுக்கு நேரடியாக பயனளிக்கும் வகையில் அதை விரிவுபடுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

2025 ஆம் ஆண்டில் சிசு செரிய திட்டத்திற்காக அரசாங்கம் 2200 மில்லியன் ரூபாய் ஒதுக்கியதாகவும், அதில் 500 மில்லியன் ரூபாய் பயன்படுத்தப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், நாட்டின் போக்குவரத்துத் துறையில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் ஒரே தளத்திற்குக் கொண்டுவரும் வகையில், தேசிய போக்குவரத்து ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தை நிறுவுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை கொழும்பு நகரில் தற்போது நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாக 'Lanka Metro Transit' பேருந்து சேவையை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் தற்போது தயார் செய்யப்பட்டு வருவதாகவும், இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்திற்குள் இதற்கான பேருந்துகள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

கொழும்பைச் சுற்றியுள்ள 6 பிரதான வீதிகள் ஊடாக இந்தத் திட்டம் ஒரு முன்னோடித் திட்டமாகச் செயற்படுத்தப்படவுள்ளதோடு, மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்படும் இந்தத் திட்டம் பின்னர் காலி மற்றும் கண்டி மாவட்டங்களுக்கும், அடுத்த 03 ஆண்டுகளுக்குள் 08 பிரதான நகரங்களுக்கும் விரிவுபடுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முன்னோடித் திட்டத்தின் மூலம் கொழும்பு நகருக்கு நாளாந்தம் பிரவேசிக்கும் தனியார் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைத்து, பயணிகளைப் பொதுப் போக்குவரத்தை நோக்கி ஈர்க்க எதிர்பார்க்கப்படுகிறது.

பேருந்துகளுக்கான முன்னுரிமைப் பாதைகளை அடையாளம் காண்பதும், அவற்றின் வினைத்திறனைப் பேணுவதும் அவசியமானது என ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

No comments: