News Just In

2/18/2026 11:19:00 AM

வங்கதேசத்தின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்றார்

வங்கதேசத்தின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்றார்



வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் வங்கதேச பிரதமராக பிஎன்பி கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் (வலது) நேற்று பதவியேற்றார். அவருக்கு வங்கதேச அதிபர் முகமது ஷகாபுதீன் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்

 வங்கதேசத்தின் புதிய பிரதமராக பிஎன்பி கட்சித் தலைவர் தாரிக் ரஹ்மான் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அதிபர் முகமது ஷகாபுதீன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த 2024-ல் மாணவர்களின் போராட்டத்தால் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. அவர் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். அதன்பின் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. இந்நிலையில் வங்கதேச நாடாளுமன்றத்துக்கு கடந்த 12-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 300 இடங்களில் வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) தலைமையிலான கூட்டணி 212 இடங்களை வென்றது. இதில் பிஎன்பி மட்டும் 151-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றியதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதையடுத்து பிஎன்பி தலைவர் தாரிக் ரஹ்மான், வங்கதேச புதிய பிரதமராக நேற்று பதவியேற்றார். டாக்காவில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவில் அதிபர் முகமது ஷகாபுதீன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தாரிக் ரஹ்மானுடன் 25 அமைச்சர்களும் 24 இணை அமைச்சர்களும் பதவியேற்றனர்.

பிரதமராக 5 ஆண்டுகள் பதவி வகிக்கவிருக்கும் தாரிக் ரஹ்மான், முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மற்றும் முன்னாள் அதிபர் ஜியாவுர் ரஹ்மானின் மகன் ஆவார். லண்டனில் இருந்து 17 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்பிய இவர், பிஎன்பி கட்சிக்கு மீண்டும் மகத்தான வெற்றியை பெற்றுத் தந்துள்ளார். வங்கதேசத்தில் கடந்த 35 ஆண்டுகளாக ஷேக் ஹசீனா, கலீதா ஜியா ஆகிய இரு பெண் பிரதமர்களே மாறி மாறி பதவியில் இருந்தனர்.

இந்நிலையில் 35 ஆண்டுகளுக்கு பிறகு ஆண் பிரதமர் ஒருவர் பதவியேற்றுள்ளார். பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதற்காக டாக்கா சென்ற இந்திய குழுவினரை, வங்கதேச வெளியுறவுச் செயலாளர் நஸ்ரூல் இஸ்லாம் வரவேற்றார்.

தாரிக் ரஹ்மானின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு வங்கதேச அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும், இந்தியாவில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதால் அவருக்கு பதிலாக ஓம் பிர்லாவை அனுப்பி வைத்தார்.

பதவியேற்பு விழாவுக்கு பிறகு பிரதமர் தாரிக் ரஹ்மானை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா சந்தித்துப் பேசினார். அப்போது இந்தியா வருமாறு பிரதமர் மோடி அனுப்பிய கடிதத்தை தாரிக் ரஹ்மானிடம் ஓம் பிர்லா வழங்கினார்.

இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் ஓம் பிர்லா வெளியிட்டுள்ள பதிவில், “பிரதமர் தாரிக் ரஹ்மான் பதவியேற்பு விழாவில்பங்கேற்றதில் மகிழ்ச்சி. ஜனநாயக, முற்போக்கான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தேசத்தை கட்டியெழுப்புவதற்கான வங்கதேசத்தின் முயற்சிகளை ஆதரிக்க இந்தியா தயாராக உள்ளது” என்று கூறியுள்ளார். மாலத்தீவு அதிபர் முகமது முய்சு மற்றும் பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்றனர். பதவியேற்பு விழாவை ஜமாத்-இ-இஸ்லாமி, தேசிய குடிமக்கள் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது

No comments: