மாவடிப்பள்ளி அல்-மதீனா பாலர் பாடசாலை மற்றும் மாவடிப்பள்ளி றோயல் பாலர் பாடசாலை மாணவர்களின் ஏடு துவக்க விழா இன்று (30) மாவடிப்பள்ளி அமீரலி தோட்டத்தில் ஆன்மீகமும் மகிழ்ச்சியும் நிறைந்த சூழலில் சிறப்பாக நடைபெற்றது.
சிறார்களின் கல்வி வாழ்க்கையின் முதல் படியை அடையாளப்படுத்தும் இவ்விழாவில், மாணவர்கள் பாரம்பரிய முறையில் ஏடு துவக்க நிகழ்வை ஆரம்பித்தனர். இந்நிகழ்வில் அல் மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளரும், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு முன்னாள் உறுப்பினருமான நூருல் ஹுதா உமர், மாவடிப்பள்ளி பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் எம்.ஐ.எம். மனாப் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் உலமாக்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பாடசாலை நிர்வாகத்தினர் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் ஆசிகளையும் வழங்கினர்.
நிகழ்வின் போது கல்வியின் முக்கியத்துவம், சிறுவயதிலேயே ஒழுக்கம், அறிவு மற்றும் நல்ல பண்புகளை வளர்த்தல் ஆகிய விடயங்கள் குறித்து உரையாற்றப்பட்டது. மேலும், சிறார்களின் எதிர்கால கல்விப் பயணம் சிறப்பாக அமைய வேண்டும் என்ற நல்வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டன.
மாணவர்களும் பெற்றோர்களும் உற்சாகத்துடன் கலந்து கொண்ட இவ்விழா, சிறார்களின் கல்வி பயணத்திற்கு ஒரு சிறந்த தொடக்கமாக அமைந்ததுடன் மாணவர்களுக்கு இனிப்புக்களும் வழங்கி வரவேற்கப்பட்டனர்.
No comments: