News Just In

1/29/2026 07:03:00 PM

வாய்ப் புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு சுவரொட்டி போட்டி : வெற்றியாளர்கள் கௌரவிப்பு

வாய்ப் புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு சுவரொட்டி போட்டி : வெற்றியாளர்கள் கௌரவிப்பு



நூருல் ஹுதா உமர்

உலக தலை மற்றும் கழுத்து புற்றுநோய் தினத்தை முன்னிட்டு பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, கல்முனை பிராந்திய வாய் சுகாதார பிரிவால் பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட சுவரொட்டிப் போட்டியின் வெற்றியாளர்களுக்குப் பரிசில்கள் உட்பட சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

குறித்த சுவரொட்டிப் போட்டியின் வெற்றியாளர்களுக்குப் பரிசளிக்கும் நிகழ்வு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் தலைமையில் நேற்று (28) பிராந்திய பணிமனையில் இடம்பெற்றது.

கல்முனை பிராந்திய வாய் சுகாதார பிரிவினால் ஒருங்கிணைப்பு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர், பிராந்திய வாய் சுகாதார பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் யூ.ஹபீப் முஹம்மட், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

தரம் 6 முதல் 9 வரையான ஒரு பிரிவிலும், தரம் 10 முதல் 13 வரையான மற்றுமொரு பிரிவிலும் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவர்களின் ஆக்கத்திறன் மற்றும் நோய் குறித்த தெளிவை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு பிரிவிலும் 10 சிறந்த சுவரொட்டிகள் நடுவர்களினால் தெரிவு செய்யப்பட்டன. இதில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்குப் பணிப்பாளரினால் விசேட பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன், ஏனையோருக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதன்போது, பிராந்திய வாய் சுகாதார பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் யூ. ஹபீப் முஹம்மட், வாய்ப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் மற்றும் அவற்றைத் தடுக்கும் முறைகள் குறித்து விளக்கக் காட்சிகளுடன் விரிவுரை நிகழ்தினார். புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெளிவுபடுத்தப்பட்டது.

இப்போட்டியில் தெரிவு செய்யப்பட்ட சிறந்த சுவரொட்டிகளை எதிர்காலத்தில் பொது விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: