கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் வித்தியாரம்ப விழாவும் புலமைப்பரிசில் சாதனை மாணவர்கள் கௌரவிப்பும்
நூருல் ஹுதா உமர்
கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில், தரம் ஒன்று மாணவர்களின் வித்தியாரம்ப விழாவும், 2025 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இன்று (29) காலை பாடசாலை ஆராதனை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலை அதிபர் ஏ.ஜி.எம். றிசாட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, இறைவழிபாட்டுடன் ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து, தரம் ஒன்று மாணவர்கள் அன்புடன் வரவேற்கப்பட்டதுடன், அவர்களது கல்விப் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டதுடன் அதிதிகளினால் ஏடும் துவக்கி வைக்கப்பட்டது.
அதேவேளை, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள், அவர்கள் கற்பித்த ஆசிரியர்கள் மேடையில் அழைக்கப்பட்டு நினைவுப்பரிசுகளும், கேடயங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மாணவர்களின் இந்தச் சாதனை, பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தின் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்தியது.
இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதியாக எம்.எச்.கே. மார்க்கட்டிங் முகாமைத்துவ பணிப்பாளர் மஹ்மூத் மாஜித் கலந்து கொண்டார், மேலும் விசேட அதிதியாக கல்முனை கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் ஐ.எல். அப்துல் ரஹ்மான் கலந்து கொண்டதுடன் பாடசாலை பிரதி அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் அழைப்புப் பெற்ற விருந்தினர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
No comments: