
முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் சொந்த ஊரில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தியது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஜனாதிபதி வடக்கில் அரசியல் நிகழ்வுகளில் ஈடுபட்டிருந்த சமயத்தில், அவரது சொந்த ஊரிலேயே இந்தக் கூட்டம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகக் கருதப்படுகிறது.
இந்த நிகழ்வைத் தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்ற போதிலும், அவை வெற்றியடையவில்லை என்றும், பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் விமர்சகர்கள் கூறுவதன்படி, இந்த நிகழ்வு குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு அரசியல் ரீதியாக ஒரு சவாலாக அமையக்கூடும்.
தற்போதைய அரசியல் சூழலில், ஒரு ஜனாதிபதியின் சொந்த ஊரில் இவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தை திரட்டுவது எளிதான காரியமல்ல என்பதால், இந்தக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
மேலும், இந்தக் கூட்டத்தின் மூலம் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு மறைமுகமான அரசியல் செய்தியொன்றை அனுப்பியுள்ளார் எனவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

“ஜனாதிபதி பதவியுடன் நீங்கள் என் ஊருக்கு வந்தீர்கள்; ஆனால் நான் எந்தப் பதவியும் இல்லாமல் உங்கள் ஊருக்கே வந்து மக்களின் ஆதரவை பெற்றுள்ளேன்” என்பதே அந்த மறைமுகச் செய்தியாக பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே பொதுமக்கள் மத்தியில் நாமல் ராஜபக்ஷின் அரசியல் செல்வாக்கு மீண்டும் உயர்ந்து வருவதாக பேசப்பட்டு வரும் நிலையில், இந்த அரசியல் நகர்வு எதிர்கால அரசியல் களத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments: