லசந்த விக்ரமசேகர படுகொலையில் இரு முக்கிய பழிவாங்கல்கள்.. STFயிடம் சிக்கிய தகவல்கள்

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையில் இரு சம்பவங்கள் தொடர்புற்றிருக்கலாம் என புலனாய்வு அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக பொலிஸார் அறிவித்திருந்தனர்.
அதற்கமைய, மூன்று பொலிஸ் குழுக்கள் மூலம் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் கூறியுள்ளார்.
இந்நிலையில், கடந்த செப்டெம்பர் 24ஆம் திகதி அன்று வெலிகம, இப்பாவல பகுதியில் நடந்த சோதனையின் போது பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை (STF) நான்கு T56 துப்பாக்கிகளைக் கண்டுபிடித்துள்ளனர்.
மற்றும் மிதிகம ருவானுக்கு விசுவாசமான நபர்கள் மீது லசந்த விக்ரமசேகர நடத்திய தாக்குதல் ஆகிய இரண்டு முக்கிய சம்பவங்களுடன் இந்தக் கொலை தொடர்புடையதாக இருக்கலாம் என்று பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த துப்பாக்கிகள் ருவானின் உறவினர்களில் ஒருவரின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டன, அவர் மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டனர். விசாரணையில் ஆயுதங்கள் ருவானுக்கு சொந்தமானது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் (22) காலை, வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர, அவரது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இனந்தெரியாத துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கூலிக்கு அமர்த்தப்பட்ட குறித்த துப்பாக்கிதாரி, வெள்ளைச் சட்டையும் கருப்பு முகமூடியும் அணிந்து விக்ரமசேகரவின் அலுவலகத்திற்குள் நுழைந்தார்.
அந்த நேரத்தில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர், அதிகாரப்பூர்வ இருக்கையில் இருந்த லசந்த விக்ரமசேகரவை குறிவைத்து, சுமார் 4 முறை துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு, மற்றொரு நபருடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்வது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
எனினும், துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த விக்ரமசேகர, மாத்தறை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் தலை, கழுத்து மற்றும் மார்பு பகுதிகளில் காயம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனவே, தென் மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த துணைப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜெயலத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் நான்கு பொலிஸ் குழுக்கள் சம்பவம் குறித்து விசாரணைகளைத் தொடங்கின. இருப்பினும், இது தொடர்பாக இதுவரை எந்த சந்தேக நபரும் கைது செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மிதிகம ருவானின் பிரிவினரால் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதற்கிடையில், தனக்கு எதிராக விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் குறித்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரி லசந்த விக்ரமசேகர ஓகஸ்ட் 29ஆம் திகதி ஐஜிபிக்கு கடிதம் அனுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.

தென் மாகாணத்தைச் சேர்ந்த உள்ளூராட்சி சபை தலைவர்களில் வெலிகம பிரதேச சபை தலைவரின் படுகொலை, மூன்றாவது கொலையாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2003 ஆம் ஆண்டில், ஹிக்கடுவ நகர சபைத் தலைவர் காமினி பின்னதுவ அவரது அலுவலகத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார், அதே நேரத்தில் 2015 ஆம் ஆண்டில், ஹிக்கடுவ பிரதேச சபைத் தலைவர் மனோஜ் மெண்டிஸும் கொலை செய்யப்பட்டார்.
1990 களில் இருந்து, 20க்கும் மேற்பட்ட உள்ளூராட்சித் தலைவர்கள் மற்றும் ஆணையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர், முக்கியமாக பாதாள உலக கும்பலுடனான வன்முறை காரணமாக, குறிப்பாக மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் இந்த படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது
No comments: