News Just In

10/25/2025 02:42:00 PM

இசாராவுக்கு உதவிய ஆனந்தன் வழங்கிய தகவல்; யாழ்ப்பாணத்தில் சிக்கிய பெரும் புள்ளி!

இசாராவுக்கு உதவிய ஆனந்தன் வழங்கிய தகவல்; யாழ்ப்பாணத்தில் சிக்கிய பெரும் புள்ளி!



நீண்ட நாட்களாக இந்தியாவிலிருந்து படகு மூலம் கஞ்சா கடத்தி வந்த கஞ்சா கடத்தல்காரர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் வைத்து கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட கஞ்சா கடத்தல்காரரிடமிருந்து 10 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்திக்கு, இந்தியாவுக்கு தப்பிச் செல்ல படகு ஏற்பாடு செய்து கொடுத்து உதவியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள ஆனந்தன் வழங்கிய தகவலின் அடிப்படையில் கஞ்சா கடத்தல்காரர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட கஞ்சா கடத்தல்காரர் படகு மூலம் கஞ்சா மாத்திரம் கடத்தி உள்ளாரா அல்லது பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவர்களை இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல உதவி உள்ளரா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

“கணேமுல்ல சஞ்சீவ” படுகொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் ஒக்டோபர் 14 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு ஒக்டோபர் 15 ஆம் திகதி நாடு கடத்தப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இஷாரா செவ்வந்தி வழங்கிய தகவலுக்கமைய இந்தியாவுக்கு தப்பிச் செல்ல படகு ஏற்பாடு செய்து கொடுத்து உதவிய ஆனந்தன் என்பவர் கைதுசெய்யப்பட்ட நிலையில், ஆனந்தன் வழங்கிய தகவலின் அடிப்படையில் கஞ்சா கடத்தல்காரர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments: