நூருல் ஹுதா உமர்
கல்முனை மாநகர சபையினால் நகரத்தை அழகு தாவரங்களை பூச்சாடிகளில் வைத்து அதிக செலவில் அழகுபடுத்த மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டம் ஒழுங்கான திட்டமிடலும் மேற்பார்வையும் இல்லாத காரணத்தினால் தாவரங்கள் வாடி, வதங்கி செத்து மடிந்து வருவதுடன் நகரத்துகு வரும் ஆடுகள், மாடுகள் போன்ற கட்டாக்காலி மிருகங்களினால் சேதப்படுத்தப்பட்டு வருவதை சம்பந்தப்பட்ட மாநகர சபை உயர் அதிகாரிகளும் இத்திட்டத்திற்கு பொறுப்பாக இருந்து செயல்படுத்தியவர்களும் கண்டும், காணாதவர்கள் போல் இருந்து வருவது கல்முனை மாநகர வரியிறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்கள் மத்தியில் ஊருக்கு ஊர் சந்திக்குச் சந்தி பேசும் விடயமாக இருந்து வருகின்றன.
இவ்வாறு கல்முனை பிரதேசபையின் முன்னாள் உறுப்பினரும் நற்பிட்டிமுனை பழில் பவுண்டேசன் சமூக சேவை அமைப்பின் தலைவருமான தேசகீர்த்தி ஏ. அப்துல் கபூர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தை தெரிவித்துள்ளார். இக்கடிதத்தின் பிரதி அம்பாறை மாவட்ட தேசிய மக்கள் சக்தி தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது விடயமாக முன்னாள் கல்முனை பிரதேச சபை உறுப்பினர் தேசகீர்த்தி ஏ. அப்துல் கபூர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தங்களின் தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் கல்முனை மாநகர சபை நிர்வாகத்தின் கீழ் உள்ள முக்கிய விடயங்களான தமிழ், முஸ்லிம் இளைஞர்களின் உயர் கல்வி நோக்கம் கருதியும் வாசகர்களின் நன்மை கருதியும் முன்னாள் அமைச்சர் மர்ஹும் கலாநிதி ஏ.ஆர். மன்சூர் அவர்களின் முயற்சியினால் உருவாக்கப்பட்ட கல்முனை பொது நூலகம் மாநகர சபையினால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.
இது நற்பிட்டிமுனை கிராமத்தில் 2 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட பொதுச் சந்தை கட்டிட தொகுதி முன்னாள் அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரவூப் ஹக்கீம் அவர்களினால் 2010.04.04 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. இப் பொதுச் சந்தை கட்டிடத் தொகுதி மக்கள் பாவணக்கு வழங்கப்படாத நிலையில் கடந்த 15 வருடங்களாக ஆடுகள்,மாடுகள் மற்றும் மனநோயாளர்கள் தங்கி வாழும் இடமாக இன்று வரை இருந்து வருகின்றன.
மீன் விற்பனை நற்பிட்டிமுனை கிராமத்தின் பிரதான சந்தியில் கொட்டில்கள் அமைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள். இதனால் நற்பிட்டிமுனை கிராமத்தின் சுற்றுச்சூழல் பாதிப்படைந்து வருவதுடன் அடிக்கடி வாகன விபத்துகளும் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. இது போன்ற முக்கியமான விடயங்கள் சம்பந்தமாக கிழக்கு மாகாண ஆளுநர், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் கல்முனை மாநகர சபை விஷேட ஆணையாளர் போன்றவர்களுக்கு பல தடவைகளாக கடிதம் மூலம் அறிவித்து வந்ததுடன் கிழக்கு மாகாண சபை ஆளுநர் அம்பாறை கச்சேரியில் 2025.02.06 ஆம் திகதி நடத்திய நடமாடும் செயலானியிலும் நேரடியாக சமுகம் கொடுத்து இப்பிரச்சினை சம்பந்தமாக எடுத்து கூறிய போதிலும் இது கால வரையில் தீர்வு கிடைக்கவில்லை..
இதன் காரணமாகவே தான் நான் கல்முனை மாநகர சபையினால் கடந்த ஆண்டு இறுதியில் திட்டமிடல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் இன்றி மேற்கொள்ளப்பட்டு கருகி அழிந்து வரும் அழகு தாவர நடுகைத் திட்டத்தில் பின்பற்றப்பட்டுள்ள முறைகேடான நடவடிக்கைகள் பற்றி ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டிய அவசியம் ஏற்பட்டது. கல்முனை மாநகர சபையின் பொதுமக்களின் வரி அறவிட்டின் மூலமாக பெற்றுக் கொள்ளப்பட்ட இலட்சக்கணக்கான நிதியை கொண்டு முன் திட்டமிடல் இல்லாது கல்முனை மாநகர சபையின் நிர்வாக சீர்கேட்டினாலும் மேற்பார்வையின்மையினாலும் வாடி வதங்கி அழிந்து செல்வதை இட்டு கல்முனை பிரதேச மக்கள் கவலை அடைந்துள்ளார்கள்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் எமது ஜனாதிபதியின் ஆழ, அகல அறிவினால் கடந்த கால ஆட்சியாளர்களினால் செய்யப்பட்டு மூடி, மறைக்கப்பட்டு இருந்த ஊழல் சம்மந்தன கோவைகளை கண்டுபிடித்து நீதிக்கு முன்னால் நிறுத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருவதை போன்று கல்முனை மாநகர சபையினால் கடந்த காலத்திலும் தற்போதைய நிலையிலும் இடம்பெற்றுள்ள மக்களின் முன்மொழிவுகள் இல்லாமலும் முன் திட்டமிடல் இல்லாமலும் மற்றும் மேற்பார்வை இன்றி செய்யப்பட்ட வேலைகளும் அதற்காக செலவழிக்கப்பட்ட நிதி விடயங்களையும் ஒரு குழுவை நியமித்து உண்மை நிலையை வெளிச்சத்துக்கு கொண்டு வர ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்த்து உள்ளார்கள் என்று அந்த அறிக்கையில் ஏ.அப்துல் கபூர் தெரிவித்துள்ளார்.
No comments: