காரைதீவு பிரதேச சபையின் 04 ஆவது சபையின் இரண்டாவது அமர்வு பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் சு.பாஸ்கரன் அவர்களின் தலைமையில் சகல உறுப்பினர்களினதும் பிரசன்னத்துடன் இன்று 14.08.2025 பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது.
தேசிய கீதத்துடன் ஆரம்பமான இந்த அமர்வில் முல்லைத்தீவு மாவட்டம், ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவில் இராணுவத்தால் தாக்கப்பட்டதாக கூறப்படும் காணாமல் போன நிலையில் முத்துஐயன்கட்டு குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் கபில்ராஜ் அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு சபை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பிரதேச சபையின் நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பள தொகையில் 80% மாத்திரமே மீள் நிரப்பல் மூலம் அரசினால் வழங்கப்படுகின்றது. மிகுதியான 20% தொகையானது சபை நிதி மூலம் வழங்கப்பட்டு வருவதால் மக்களுக்கான அபிவிருத்தி வேலைகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அரசினால் வழங்கப்படும் மீள் நிரப்பல் தொகையை 100% ஆக வழங்குவதற்கு அரசினை கோருவதற்கு முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு சபை அனுமதி வழங்கியது.
மேலும் வர்த்தமானி அறிவித்தலுக்கமைவாக தொலைபேசி பாவனைக்கு மாதாந்தம் தவிசாளர் (2500/-), உபதவிசாளர்(1500/-), உறுப்பினர்களுக்கு மாதாந்தம் (1000/-), எனும் உச்ச தொகை வழங்க சபை அனுமதி வழங்கியதுடன் பிரதேச சபையின் வாகனத்தை தவிசாளர் அலுவலக நோக்கத்திற்கு பயன்படுத்தும் போது மாதமொன்றுக்கு பயன்படுத்தும் எரிபொருள் அளவை (லீற்றரில்) தீர்மானித்து சபை அனுமதி வழங்கியது.
உபசரணைச் செலவுக்கும், அலுவலகத்திற்கு தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கும் சபை அங்கீகாரம் வழங்கியதுடன் பிரதேச சபை ஊழியர்களுக்கு இடர்கடனாக ஒவ்வொருவருக்கும் ரூ.100,000.00 தொகையினை வழங்க தவிசாளர் முன்வைத்த பிரேரணைக்கு உறுப்பினர்கள் சம்மதம் தெரிவித்ததுடன் தொகையை சபையின் வருமானத்தை கொண்டு அதிகரிப்பது தொடர்பில் உறுப்பினர்களிடம் வாதப்பிரதி வாதங்கள் எழுந்தது.
இதன்போது மாவடிப்பள்ளி கிராமத்திற்கு சிறுவர் பூங்கா ஒன்றை அமைக்குமாறு, அதற்கான காணி கிராம சேவை உத்தியோகத்தரினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் 29.07.20250 நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கடந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கமைய குறிப்பிட்ட காணியினை குறித்த வட்டார கௌரவ உறுப்பினர்களுடன் பார்வையிட்டு பெற்றுக்கொள்வதற்கான தொடர் மேற்கொள்ள சபை அனுமதி கோரப்பட்ட போது மாவடிப்பள்ளியை சேர்ந்த இரு உறுப்பினர்களும் காணி பெறுவதில் உள்ள விடயங்களை சபைக்கு முன்வைத்து தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
இதன்போது காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், பிரதேச சபை உறுப்பினருமான கி. ஜெயசிறில் கடந்த காலங்களில் தமிழர்களுக்கு நடைபெற்ற அநியாயங்கள் தொடர்பில் சபையில் விசேட உரையாற்றி எதிர்வரும் 18ம் திகதி இடம்பெறவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு மலையக தலைவர்கள் ஆதரவு தந்தது போன்று எங்களுடன் இணைக்க அரசியல் அரசியல் செய்யும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் ஏனைய அரசியல் கட்சிகளும் ஆதரவு தருமாறு கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது
No comments: