மட்டு.கல்லாறு பாலத்தின் வடிச்சல் குழாய் அடைப்புகளை சீர் செய்து வெள்ள அபாயத்திலிருந்து மக்களை காப்பாற்றுங்கள்

மட்டக்களப்பு – கோட்டைகல்லாறு பாலத்தின் வடிச்சல் குழாய்கள் மணல் மற்றும் புற்களால் அடைபட்டுள்ளதால் மழை காலத்தில் வெள்ள நீர் கடலுக்குள் வழிந்தோட முடியாததையடுத்து குடிமனைகள், வயல் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கி பாதிக்கப்படவுள்ளது. எனவே அடைபட்டுள்ள இந்த பாலத்தின் வடிச்சல் குழாய்களை சீர்செய்து விவசாயிகளையும் மக்களையும் அழிவில் இருந்து காப்பாற்றுமாறு மாவட்ட கமக்கார சங்கங்களின் சம்மேளன செயலாளர் நிரஞ்சன் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் பெய்யும் மழை நீர் மற்றும் இங்கினியாகலை குளத்தின் மேலதிக நீர், மண்டூர், வெல்லாவெளி பிரதேசங்களில் இருந்து வரும் வெள்ள நீர் இந்த பாலத்தின் ஊடாக வடிந்து கடலுக்கு செல்லும் நிலையில், கடந்த 2004 சுனாமி அனர்த்தத்தினால் முற்றாக பாதிக்கப்பட்டிருந்த குறித்த பாலத்தை ஜப்பான் மக்களின் நன்கொடை மூலமாக வழங்கப்பட்ட நிதியினை கொண்டு இந்த பாலம் அமைக்கப்பட்டு பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிலையில் குறித்த பாலத்தில் 20 க்கு மேற்பட்ட வடிச்சல் குழாய்கள் அமைக்கப்படடுள்ளது. இதில் 10க்கு மேற்பட்ட வடிச்சல் குழாய்கள் மணல் மற்றும் புற்களால் முற்றாக அடைபட்டுள்ளதால் இதனூடாக கடலுக்கு நீர்வடிந்தோட முடியாததையடுத்து வயல் நிலங்கள் மற்றும் ஏனைய குடியிருப்புக்கள் வெள்ளத்தினால் மூழ்கி பாதிக்கப்படுகின்றது. இதனால் விவசாயிகளுக்கு பல இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்படுகின்றதுடன், மக்கள் சொல்லொணா துன்பங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
பாலத்தின் வடிச்சல் பகுதி அடைக்கப்பட்டது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடந்த இரண்டு மூன்று வருடங்களாக தெரிவித்தபோதும், எவரும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அதேவேளை இந்த பாலத்துக்கு பொறுப்பான திணைக்களம் இந்த பாலத்தை பராமரிக்காததால் ஆலமரம் மற்றும் அரச மரம் பாலத்தில் வளர்ந்து வருவதால் பாலத்தில் வெடிப்பு ஏற்பட்டு வருகின்றது.

அதேவேளை, இந்த பிரதான பாலத்தின் ஊடாக பல அரசியல்வாதிகள், அதிகாரிகள் உட்பட உரியதரப்பினர் பிரயாணம் செய்கின்றனர். அவர்களும் இதனை கவனிப்பதாக இல்லைஎனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கவனம் எடுத்து இங்குள்ள இயந்திரங்களை பாவித்து இதனை உரிய அதிகாரிகள் சீர் செய்து வரும் வெள்ள அனர்த்த அழிவில் இருந்து விவசாயிகளையும் மக்களையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
No comments: