மட்டக்களப்பு மாவட்டத்தின் 10 பிரதேச செயலகப் பிரிவுகளில், பள்ளி செல்லாத 154 மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் மட்டக்களப்பில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 18ஆம் திகதி மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த இலவச மருத்துவப் பரிசோதனை முகாம் வரும் சனிக்கிழமையன்று (22.03.2025) நண்பகல் 12 மணியுடன் மட்டக்களப்பு மகிழடித்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் நிறைவு பெறுகிறது.
ஏற்கெனவே மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இந்த இலவச மருத்துவப் பரிசோதனை முகாம் புதனன்று ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரிப் பணிமனையிலும், வியாழனன்று வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரிப் பணிமனையிலும் இடம்பெற்றுள்ளன. வெள்ளியன்று களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரிப் பணிமனையில் இடம்பெறவிருக்கிறது.
கொழும்பைச் சேர்ந்த ஆறு நிபுணர்களைக் கொண்ட நிபுணர் குழுவுடன், புகழ்பெற்ற குழந்தை சுகாதார நிபுணரான டாக்டர் நதி நிசன்சலா பீரிஸ் தலைமையில் இந்த இலவச வைத்திய பரிசோதனை செயல்முறை நடைபெறுகிறது.
நிகழ்வின் துவக்கத்தில் உரையாற்றிய சுகாதார வைத்திய நிபுணர் நதி நிசன்சலா பீரிஸ், இது குழந்தைகளின் மருத்துவம், கல்வி, ஊட்டச்சத்து நிலைமைகள் குறித்த விரிவான மதிப்பீட்டை உறுதி செய்கிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கு முழுமையான பராமரிப்பையும் மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தையும் உறுதி செய்வதில் இந்த முயற்சி ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லாகும். இவ்வாறான குழந்தைகளுக்கான எதிர்கால ஈடுபாடுகளிலும் ஆதரவுகளிலும் உள்ள அமைப்புகளை வழிநடத்தும் முக்கியமான தரவுகளை இது உருவாக்கி எதிர்காலத்தில் ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்ப இத்தகைய துவக்கப் பணிகள் உதவும்” என்றார்.
துவக்க நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் இயக்குநர் ஆர். முரளீஸ்வரன், தாய் சேய் சுகாதார மருத்துவ அதிகாரி கிரிசுதன், புகலிடம் அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர் கே. டேவிட் ஷியாம் ஆகியோர் இந்தப் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிக் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாத நிலையில் எதிர்கொள்ளும் சுகாதாரம் மற்றும் கல்வி இடைவெளியைக் குறைப்பதில் இந்த முயற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கருத்துத் தெரிவித்தனர்.
மேலும், வீட்டோடு தங்கியிருக்கும் மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்காக உள்வாங்கிய கல்வி - குழந்தைகளை பள்ளிக் கூடங்களில் ஒருங்கிணைப்பது, சிறப்புக் கல்வி அலகுகள் - சிறப்பு கற்றல் சூழல்களை வழங்குதல், ஆகியவற்றில் புகலிடம் அமைப்பு தன்னை அர்ப்பணித்துள்ளது. இது பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிச்சுமையைக் குறைத்திருப்பதாக அங்கு அதிதிகளால் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
மெதடிஸ்த திருச்சபை புகலிடம், மட்டக்களப்பின் பிராந்திய சுகாதார சேவைகள் இயக்குநருடன் இணைந்து, கேஎன்எச் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் இவ்வாறான மாற்றுத்திறனாளிக் குழந்தைகளின் உடல் நலம், கல்வி, ஊட்டச்சத்து தேவைகளை மதிப்பிடுவதையும், அவர்களின் நல்வாழ்வுக்கும் மேம்பாட்டிற்குமான ஆதரவுத் திட்டங்களை உருவாக்குவதையும் இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது என புகலிடம் தன்னார்வத் தொண்டு அமைப்பின் பணிப்பாளர் அடிகளார் ஏ. சாமுவேல் சுபேந்திரன் தெரிவித்தார்.
No comments: