(ஏ.எச்.ஏ.ஹுஸைன்)
சுற்றுச் சூழல் பாதுகாப்பை மேம்படுத்தி, பல்லுயிர்த்தன்மையைப் பாதுகாத்து, ஆரோக்கியத்தைப் பேணும் வகையிலமைந்த இயற்கையைத் தக்க வைத்துக் கொள்ளும் கூட்டிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் தங்கராஜா திலீப்குமார் தெரிவித்தார்.
வீ எபெக்ற் நிறுவனத்தின் நிதி அனுசரணையில்இ வாகரைப் பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் இளைஞர் அபிவிருத்தி அகம் சல்லிமுனைப் கடற்கரையோரப் பிரதேசத்தில் மக்கள் பங்களிப்புடனான துப்புரவாக்கும் பணிகளில் ஈடுபட்டது.
வாகரைப் பிரதேச சபை ஊழியர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராம மட்ட கூட்டுறவுச் சங்கங்களின் உறுப்பினர்கள், கரையோர சமூக மக்கள், சுற்றுச் சூழல் நேய ஆர்வலர்கள், ஆகியோரின் பங்குபற்லுடன் கடற்கரையோ சுத்தமாக்கும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டன.
விழிப்புணர்வூட்டும் இந்த கரையோர கழிவகற்றல் நிகழ்வுபற்றி கருத்துத் தெரிவித்த திலீப்குமார்,
கடற் கரையோர நீர்நிலைகள் மாசுபடுவதைத் தவிர்த்து மீன் வளத்தையும் இன்னபிற கடல்வாழ் உயிரினங்களையும் பாதுகாத்து உயிரினப் பல்வகை இயற்கை வழி இயங்கியலை தக்க வைத்துக் கொள்வதே இதன் நோக்கமாகும்.
மேலும், இதன் மூலம் சமூக மட்ட ஆதரவுடன் நிலைபேறான சமுதாய சுற்றுச் சூழல் அபிவிருத்தியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அக்கறையற்ற விதத்தில் கடற்கரையோரங்களில் உள்ள நீரேந்துப் பகுதிகளில் வீசப்படும் திண்மக் கழிவுகள், பிளாஸ்ரிக் கழிவுகள் அகியவை அப்பிரதேசங்களில் மட்டுமன்றி அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கடல் நீரினால் அது எங்கெங்கு அடித்துச் செல்லப்படுமோ அங்கெல்லாம் பல்லுயிர்த் தன்மைக்கும் கடல், வாவி வாழ் உயினங்களுக்கும் தாவரங்களுக்கும் மனிதர்களுக்கும் பெருத்த பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
மேலும், இதனால் நம் நாட்டுக்கு வருமானத்தை ஈட்டித் தரும் சுற்றுலாத் துறையும் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. மனோரம்மியமான அழகிய இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரைப் பிரதேசங்கள் திண்ம, திரவக் கழிவுகளால் அசிங்கப்படுத்தப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் அப்பிரதேசங்களுக்குச் செல்ல சங்கடப்படுகிறார்கள்.
கழிவுகளை முறையற்ற விதத்தில் வீசுதல் பேரழிவு தரும் சற்றுச்சூழல் பிரச்சினையாக தற்போது உருவெடுத்தள்ளது. இதனை குறைத்து காலப்போக்கில் சுற்றுச்சூழல் அழிவை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் பிரதேச மக்களின் முழுமையான விழிப்புணர்வுடன் கூடிய இந்த மக்கள் பங்களிப்புடனான வேலைத் திட்டம் அமுல்படுத்தப்படுகிறது.
இயற்கைச் சூழலைப் பேணும் வகையில் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனம்இ வருடாவருடம் தேசிய கடல்சார் வளங்களைப் பாதுகாக்கும் தேசிய வேலைத் திட்டம்இ சர்வதேச இடர் அபாயக் குறைப்பு தின வேலைத் திட்டம், உலக சூழல் தின அமுலாக்க வேலைத் திட்டம், ஆகியவற்றில் பங்களிப்புச் செய்தும் மக்களை விழிப்பூட்டியும் வருகிறது” என்றார்.
சல்லிமுனையில் இடம்பெற்ற விழிப்புணர்வூட்டல் கடற் கரையோர துப்புரவாக்கும் பணிகளில் பனிச்சங்கேணி கிராம அலுவலர் கே. மதிகரன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மாலதி விவேகானந்தன், வாகரைப் பிரதேச சபை ஊழியர்கள், இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவன களப்பணி அலுவலர் ஏ. சஞ்ஜித் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
No comments: