தமிழர் அரசியல் தொடர்ந்தும் பலவீனமடைந்தே செல்கின்றது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என்போரி;ன் பொறுப்பற்ற அணுகு முறைகள் ஒரு காரணம் என்றால் – பொறுப்பற்ற சிவில் சமூகமும் அணுகுமுறைகளும் பிரதான காரணங்களாகும். இன்னொரு காரணம் ஊடகங்கள். அது தொடர்பில் தனியான தலைப்பு ஒன்று தேவையென்பதால் அதனை பின்னர் நோக்குவோம்.
போருக்கு பின்னரான கடந்த பதினைந்து வருடங்களில் அரசியல் கட்சிகளுக்கு சமதையாக சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் கருத் துருவாக்கிகள் என்போரும் தமிழ்த் தேசிய அரசியல் தொடர்பில் தங்களின் கரிசனைகளை வெளிப்படுத்தி வந்திருக்கின்றனர். அரசியல் கட்சிகளின் அணுகுமுறைகள் எவ்வாறு மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டுமோ – அதேயளவுக்கு சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் சிவில் சமூகங்களின் பெயரால் ஈடுபாடு காண்பித்த தனிநபர்களின் தலையீடுகளும் அவற்றின் விளைவுகளும் மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.
சிவில் சமூகங்கள் காத்திரமான தலையீடுகளை செய்திருக்கின்றனவா? மக்களின் நலன்களை முன்வைத்து செயல்பட்டிருக்கின்றனவா? அரசியல் கட்சிகள் பொறுப்பற்று செயல்படுகின்ற போது, அவற்றின் மீது அழுத்தங்களை பிரயோகித்து, அவற்றை சரியான திசைவழி நோக்கி வளைப்பதுதான் சிவில் சமூகங்களின் பணியாக இருக்க வேண்டும். ஆனால், கடந்த பதினைந்து வருடங்களில் இடம்பெற்ற சிவில் சமூக தலையீடுகள் அவ்வாறான அணுமுறையைக் கொண்டிருந்ததா என்னும் கேள்வியுண்டு. ஏனெனில், அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளுக்கு ஏதோவொரு வகையில் முண்டு கொடுக்கும் காரியங்களிலேயே சிவில்
சமூக அமைப்புக்களும், அதன் பெயரில் செயல்பட்ட தனிநபர்களும் செயல்பட்டிருக்கின்றனர்.
சிவில் சமூகங்களின் பெயரில் கடந்த பதினைந்து வருடங்களில் இடம்பெற்ற எந்தவொரு விடயமும் தமிழர் அரசியலில் காத்திரமான அதிர்வுகளை ஏற்படுத்தவில்லை. ஜ.நாவிற்கு கடிதம் எழுதுதல் தொடங்கி அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கும் சிவில் முயற்சிகள் எவையுமே ஆக்கபூர்மான விளைவுகளை ஏற்படுத்தவில்லை. இறுதியில் தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை முன்னெடுத்ததன் விளைவாகவும் ஆக்கபூர்வான விளைவுகள் எவையும் இடம் பெறவில்லை. தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் ஒப்பீட்டடிப்படையில் அதிகமான கட்சிகளும் சிவில் சமூகங்களும் ஆர்வமுள்ள தனிநபர்களும் ஒன்றிணைந்திருந்தனர் எனினும், சில சிவில் சமூகக் குழுக்களினதும் கருத்துருவாக்கிகள் என்போரும் சமூகப் பொறுப்பற்ற அணுகுமுறைகளால் அனைத்து முயற்சிகளும் விழலுக்கிறைத்த நீரானது.
தேசிய மக்கள் சக்தி வடக்கு, கிழக்கிலும் வெற்றிபெற்றிருப்பதைத் தொடர்ந்து தமிழர் அரசியல் புதிய நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கின்றது. இந்த நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நோக்கில் பொறுப்பு மிக்க சிவில் சமூகத் தலையீடுகள் அவசியம். வெறுமனே தேசியவாத சுலோகங்களை உச்சரிக்கும் வழமையான வாய்ப்பாட்டு அணுகுமுறைகளை புறம்தள்ளி, யதார்த்தமான அணுகுமுறைகளை ஊக்குவிக்கும் சிவில் சமூகத் தலையீடுகளே இன்றைய தேவை. உள்ளூராட்சித் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தரப்புக்கள் வெற்றி பெறக் கூடிய யதார்த்தபூர்வமான அணுகுமுறைகளில் கட்சிகளை ஒன்றிணைப்பதற்கான சிவில் சமூக அழுத்தங்கள் அவசியம். அதேவேளை, அரசியலமைப்பில் இருக்கின்ற விடயங்களை உச்சபட்சமாகப் பயன்படுத்துவதற்கு ஏற்றவாறான அரசியல் உரையாடல்களும் அவசியம்
நன்றி ஈழநாடு
No comments: