இந்த வருடம் ஜனவரியில் தலைவரைத் தெரிவு செய்வதற்கு பொதுச்சபையில் நடந்த தேர்தலுக்கு பிறகு இலங்கை தமிழ் அரசு கட்சி இரு முகாம்களாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது. யாழ்ப்பாண மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரனையும் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரனையும் இரு துருவங்களாகக் கொண்டே அந்த முகாம்கள் அமைந்திருக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரியும். தலைவர் பதவிக்கான தேர்தலில் சிறீதரன் வெற்றி பெற்றபோதிலும் நீதிமன்றில் விசாரணையில் உள்ள வழக்குகள் காரணமாக அவரால் அந்தப் பதவியை இன்று வரை பொறுப்பேற்க முடியாமல் இருக்கிறது. இதேவேளை, சுமந்திரன் மத்திய செயல்குழுவில் தனக்கு இருக்கும் ஆதரவை அனுகூலமாக பயன்படுத்திக் கொண்டு தற்போது தமிழ் அரசு கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.
மத்திய செயல்குழுவை கூட்டுவது தொடக்கம் தேர்தல்களில் வேட்பாளர்களை நியமிப்பது வரை இன்று சகல விடயங்களையும் தீர்மானிக்கும் ஒரு வலிமையான நிலையில் சுமந்திரன் இருக்கிறார். கட்சியின் தலைவராக இன்னமும் தொடர்கிறாரென நம்பப்படும் மாவை சேனாதிராசாவும் சிறீதரனும் தங்களின் விருப்பத்தின் பிரகாரம் மாவட்ட வேட்பாளர்கள் பட்டியலில் ஒருவரைக்கூட இடம்பெறச்செய்ய முடியாதவர்களாக கையறு நிலையில் நிற்பது பரிதாபம். தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றவர் எதையும் செய்ய முடியாமல் இருக்க, தோல்வி கண்டவர் கட்சியைத் தனது கட்டுப்பாட்டில் (தற்காலிகமாகவேனும்) எவ்வாறு கொண்டுவரக்கூடியதாக இருந்தது என்பதற்கு பதில் கூறவேண்டிய கடப்பாடு வேறுயாருக்கும் அல்ல மாவை சேனாதிராசாவுக்கும் சிறீதரனுக்குமே பெருமளவுக்கு இருக்கிறது. இந்த விடயங்களை இங்கு கூறுவதற்கு ஒரு காரணம் பாரம்பரியமாக வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்துவந்த – இரு மாகாணங்களிலும் பரந்தளவில் தமிழ் மக்களின் ஆதரவைக் கொண்டிருந்த ஓர் அரசியல் இயக்கத்தின் கதி பாராளுமன்றத் தேர்தலுக்கு பிறகு எவ்வாறு அமையப் போகிறது என்ற அக்கறையேயாகும். அடுத்த பாராளுமன்றத்தில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் எந்தக் கோலத்தில் அமையப்போகிறது என்ற ஏக்கம் அடுத்த காரணம்.
நாம் விரும்புகிறோமோ இல்லையோ உள்நாட்டு போரின் முடிவுக்கு பின்னரான சூழ்நிலையில் பாராளுமன்றத்தில் உருப்படியான பிரதிநிதித்துவத்தைக் கொண்டிராவிட்டால் எந்தவொரு தமிழ்க் கட்சியாலும் பயனுறுதியுடைய செயல்பாட்டை முன்னெடுக்க முடியாத நிலையே இன்றும் காணப்படுகிறது. பாராளுமன்றத்துக்கு வெளியில் ஜனநாயக ரீதியில் என்றாலும், உறுதியான அரசியல் போராட்ட இயக்கத்தை முன்னெடுக்கக்கூடிய அரசியல் துணிவாற்றலோ அல்லது வல்லமையோ அல்லது அர்ப்பணிப்பு சிந்தையோ இன்றைய தமிழ்க் கட்சிகளில் எந்த ஒன்றிடமும் இல்லை. வெறுமனே மக்களை உணர்ச்சி வசப்படுத்த பழைய சுலோகங்களை உச்சரிக்க மாத்திரமே அவற்றின் தலைவர்களுக்கு தெரியும். அதனால், தமிழ் அரசு கட்சி உருப்படியான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கு தங்களது இன்றைய செயல்பாடுகள் எந்தளவுக்கு உதவும் என்பது குறித்து அதன் தலைவர்கள் என்று சொல்லப்படுவோர் கிஞ்சித்தேனும் சிந்தித்துப் பார்க்கிறார்களா என்று கேட்காமல் இருக்க முடியவில்லை. சில தினங்களுக்கு முன்னர் யாழ். நகரில் தந்தை செல்வா கலையரங்கில் தமிழ் அரசு கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்ட நிகழ்வில் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட முதன்மை வேட்பாளர் சிறீதரனை காணவில்லை. ஆனால், அதற்கு முதல் சேனாதிராசாவிடம் விஞ்ஞாபனம் கையளிக்கப்பட்ட போது அங்கு அவர் நின்றார். தனது செயலுக்கான காரணத்தை இதுவரையில் அவர் மக்கள் அறிய கூறவில்லை.
அந்த செயல் மூலமாக சிறீதரன் தமிழ் அரசு கட்சியின் தொண்டர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் மக்களுக்கும் கூறுகின்ற செய்திதான் என்ன? கட்சிக்குள் கூர்மையான முரண்பாடுகள் இருக்கின்றன என்பது உண்மை. தலைவர்களுக்கு இடையில் தன்னகம்பாவ போட்டி நிலவுகின்றது என்பதும் உண்மை. முரண்பாடுகளுக்கு கோட்பாட்டு வேறுபாடுகளையும் விட வேறுகாரணங்களே அதிகம். ஆனால், குறைந்தபட்சம் தேர்தலில் கட்சியின் நலன்களுக்காகவேனும் ஒன்றுபட்டு நிற்பது போன்ற ஒரு ‘காட்சியைக்’கூட காட்ட முடியவில்லை என்றால் தமிழ் மக்கள் தமிழ் அரசு கட்சியை எதற்காக தேர்தலில் ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்பதை வாக்களிப்புக்கு இன்னமும் பத்து நாட்கள்கூட இல்லாத நிலையிலாவது அதன் தலைவர்கள் கூறுவார்களா? கட்சியின் பாரம்பரிய பெருமையை நெடுகவும் பேசிக்கொண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை. தென்னிலங்கையின் பாரம்பரிய கட்சிகளுக்கு நேர்ந்திருக்கும் கதியை தமிழ் அரசு கட்சி மாத்திரமல்ல சகல தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் ஒரு கணம் சிந்தித்துப்பார்க்க வேண்டும்
நன்றி ஈழநாடு
No comments: