News Just In

10/20/2024 03:04:00 PM

13 ஆவது திருத்தத்தை எமது தலைவர் ஏற்றுக் கொள்ளவில்லை! து.ரவிகரன்

13 ஆவது திருத்தத்தை எமது தலைவர் ஏற்றுக் கொள்ளவில்லை!  து.ரவிகரன்



இந்தியா பச்சோந்தி தனமாக இருக்க கூடாது. 13 ஆவது திருத்தத்தை எமது தலைவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் எமது அரசியல் தலைவர்கள் வேறு என்ன தான் செய்வது என்று அதனை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் அதில் காணி அதிகாரம் இல்லை பொலிஸ் அதிகாரமும் இல்லை. பிறகு எதற்காக எங்களுக்கு அந்த அதிகாரம் என வட மாகாணசபை உறுப்பினரும், வன்னி மாவட்ட தமிழரசுக் கட்சியின் வேட்பாளருமான து.ரவிகரன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் நேற்று (19) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

அபிவிருத்தியோடு எமது தீர்வை நோக்கி பயணிப்பதே எமது இலக்கு. ஆனால் எமது நிலம் இருந்தால் மாத்திரமே அந்த அபிவிருத்தியை செய்ய முடியும். எமது நிலம் எமது உரிமை. அது இல்லாவிட்டால் ஒன்றுமே இல்லை.

வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் பாரிய நிலப்பரப்புக்கள் பறிபோய்க்கொண்டு இருக்கிறது. எமது போராட்டங்களின் ஊடக குறுகிய அளவை என்றாலும் நாம் காப்பாற்றிக் கொண்டிருக்கிறோம்.

எமது மதத்தை அழித்து பௌத்த மதத்தை விஸ்தரிக்க வேண்டும் என்று இனவாதிகள் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றனர். பொலிஸ், இராணுவம் என நாட்டின் அனைத்து படைகளும் அவர்களுடையது. இந்த படைகள் கொஞ்சம் கூட நீதி நியாயம் இல்லாமல். பௌத்த மதத்திற்கும் சிங்கள ஆட்சியாளர்களுக்கும் தமது விசுவாத்தினை காட்டும் நோக்கத்துடன் இயங்கிக் கொண்டிருக்கிறது.

அதற்கு மாறாக நாங்கள் களத்திலே நிற்கின்றோம். எங்களை காத்தவர்கள் இன்று மௌனிக்கப்பட்ட நிலையில் மக்களாகிய நாங்கள் எமது உரிமைக்காக போராட வேண்டிய காலம் இன்னும் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. போராடிக்கொண்டுதான் இருக்கிறோம். தீர்வு தான் கிடைக்கவில்லை.

மாற்றம் என்று கூறப்படும் இந்த ஆட்சி ஒரு வருடத்தை கடந்தபின் தான் தெரியும் இதன் போக்கு எப்படி இருக்கிறது என்று. எனவே வடகிழக்கு தமிழர் தாயகம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ளவேண்டும்.

சர்வதேசம் பாராமுகமாக இருக்க கூடாது. இந்தியா பச்சோந்தி தனமாக இருக்க கூடாது. 13 வது திருத்தத்தை எமது தலைவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் எமது அரசியல் தலைவர்கள் வேறு என்னதான் செய்வது என்று அதனை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் அதில் காணி அதிகாரம் இல்லை பொலிஸ் அதிகாரமும் இல்லை பிறகு எதற்காக எங்களுக்கு அந்த அதிகாரம்.

எமது நிலத்தை முழுவதுமாக பறித்து விட்டால் நாங்கள் என்ன எங்கயும் ஓடுவதா?. இலங்கை தமிழன் ஆண்ட பூமி எனவே எமக்கான தீர்வை ஏதோ ஒரு விதத்தில் இவர்கள் தரத்தான் வேண்டும் தட்டிக் கழிக்க முடியாது. எனவே இதற்கு எதிராக எமது குரல்கள் தொடர்ச்சியாக ஒலித்துக் கொண்டிருக்கும் என்றார்

No comments: