இங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் அனைத்து வீரர்களும் தமது அதிகபட்ச திறமையை வௌிப்படுத்துவார்கள் என நம்புவதாக தேசிய கிரிக்கெட் அணியின் பதில் பயிற்சியாளர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இன்று (11) காலை இலங்கை வீரர்களுடன் இங்கிலாந்து செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்வதற்கு முன்னர் சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு முன்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கிரிக்கெட் வீரர்களுக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குமாறு ரசிகர்களிடம் கோருவதாகவும் சனத் ஜயசூரிய இதன்போது குறிப்பிட்டார்.
தற்காலிக பயிற்சியாளராக இங்கிலாந்து சுற்றுப்பயணம் தனது இறுதி சுற்றுப்பயணம் என்றும், முடிந்தவரை போட்டியை சிறப்பாக முடிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் இதன்போது கூறினார்.
கேள்வி - வாய்ப்பு கிடைத்தால் தொடர்ந்து பயிற்சிவிப்பீர்களா?
"நான் அதைப் பற்றி இன்னும் யோசிக்கவில்லை, எனக்கு இந்த தொடர் மட்டுமே வழங்கப்பட்டது."
கேள்வி - வேறு எதுவம் அழைப்பு உள்ளதா?
"இல்லை, அழைப்பு இல்லை."
இந்த டெஸ்ட் தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட அணிக் குழாம் அண்மையில் அறிவிக்கப்பட்டது.
இதற்கு தனஞ்சய டி சில்வா தலைமை தாங்குகிறார்.
தற்போது 7 வீரர்கள் ஆரம்ப பயிற்சி நடவடிக்கைகளுக்காக இங்கிலாந்து சென்றுள்ளனர்.
அணித்தலைவர் தனஞ்சய டி சில்வா, திமுத் கருணாரத்ன, அஞ்சலோ மெத்யூஸ், கசுன் ராஜித உள்ளிட்ட 7 வீரர்கள் இங்கிலாந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளன.
முதல் போட்டி எதிர்வரும் 21ஆம் திகதி மென்செஸ்டரிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி 29 ஆம் திகதி லோர்ட்ஸ் மைதானத்திலும் தொடங்குகிறது.
மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி லண்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
No comments: