News Just In

8/05/2024 02:52:00 PM

குழந்தைகளுக்கு தாய்ப்பாலினை கொடுப்பதனை தவிர்த்து ஏனைய பால்மா வகைகளை கொடுப்பதுவிசத்தினை கொடுத்திடும் செயற்பாட்டிற்கு சமம் !.

குழந்தைகளுக்கு தாய்ப்பாலினை கொடுப்பதனை தவிர்த்து ஏனைய பால்மா வகைகளை கொடுப்பது பெற்ற குழந்தைக்கு விசத்தினை கொடுத்திடும் செயற்பாட்டிற்கு சமம் .

சர்வதேச தாய்பால் தினத்தில் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் டாக்டர் சனூஸ் காரியப்பர்


(அஸ்ஹர் இப்றாஹிம்)

குழந்தைகளின் தேக ஆரோக்கியத்திற்கு தேவையான தாய்ப்பாலினை கொடுப்பதனை தவிர்த்து ஏனைய பால்மா வகைகளை கொடுத்திடும் செயற்பாடு தாம் பெற்ற குழந்தைக்கு விசத்தினை கொடுத்திடும் செயற்பாட்டிற்கு சமம் .

இவ்வாறு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை சிரேஸ்ட வைத்திய அதிகாரி டாக்டர் சனூஸ் காரியப்பர் வைத்தியசாலைக்கு வெளிநோயாளர் சிகிச்சை பிரிவிற்கு வருகை தந்திருந்த கற்பிணித்தாய்மார் மத்தியில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

சர்வதேச ரீதியில் தாய்ப்பால் தினம் கொண்டாடப்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தில் தாய்ப்பாலுக்கு சர்வதேச ரீதியில் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது என்பதனை இச் சர்வதேச தினம் சுட்டிக் காட்டுகின்றது.

ஒரு தாய் பாலூட்டல் மூலம் 42 சதவீதமான மார்பக புற்று நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.ஒரு தாயினால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் அந்த குழந்தைக்கு மட்டும் நன்மை கிட்டுவதில்லை தாய்க்கும் பல்வேறு வழிகளில் நன்மை கிடைக்கின்றது. பிறந்த குழந்தையொன்று தொடர்ச்சியான அதன் ஆறு மாத காலத்திற்கும் தாய்ப்பாலை மட்டும் உட்கொள்ளும் போது ஆறு மாத காலத்திற்கு பிற்பாடு இரண்டு வருட காலத்திற்குள் ஏனைய உணவுகளுடன் தாய்ப்பாலையும் சேர்த்து கொடுக்கும் பட்சத்தில் குழந்தையானது அதிகளவு நோய் எதிர்ப்பு சக்திகளைப் பெறுவதோடு புரதம் உட்பட பல்வேறு சத்துக்கள் குழந்தைக்கு கிடைக்கின்றது.

இவ்வாறு தாய்ப்பாலூட்டத்தால் வளரும் குழந்தை எதிர்காலத்தில் பூரண ஆரோக்கியமான பிரஜையாக தோற்றம் பெறும்.ஒரு தாய் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதால் மார்பகப் புற்றுநோயிலிருந்து 42 சதவீதம் பாதுகாத்துக் கொள்ள முடியும்.அது மட்டுமல்லாது வயதான காலங்களில் ஏற்படும் எலும்பு முறிவு , எலும்பு தேய்வு போன்றவை ஏற்படாமல் இருப்பதற்கும் தாய்ப்பாலூட்டல் மிகவும் அவசியம்.

சந்தைகளில் காணப்படும் பால்மாவினை தவிர்த்து தாய்ப்பாலினை ஒரு குழந்தைக்கு கொடுப்பதன் மூலம் ஒரு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதோடு அவர்களின் எதிர்காலமும் சிறத்தலடையும் என தெரிவித்தார்.

No comments: